Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஉலகம்வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு: இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா எச்சரிக்கை

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு: இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா எச்சரிக்கை

தமிழகத்தில் உயர் கல்வி பயின்ற இளைஞர்கள் கம்போடியா தாய்லாந்து மியான்மர் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்படுவதால் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது செய்தி குறிப்பு:

தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை சமூக வலைதளம் மூலமாக மூளைச்சலவை செய்து கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மார் நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ”டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்” (Digital Sales and Marketing Executive), ”தரவு உள்ளீட்டாளர்” (Data Entry Operator), வேலை, ”அதிக சம்பளம்” என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online Scamming) போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் அரசுக்கு வருகின்றன.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமலிருக்க, வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், அரசினால் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? போன்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்த விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் ”அயலகத் தமிழர் நலத்துறை” அல்லது ”குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை” அல்லது சம்மந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டும், இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசினால் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்கள் www.emigrate.gov.in இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம். மேலும், சென்னை குடிபெயர்வு அலுவலக உதவி எண். 90421 49222 மூலமாகவும், poechennai1@mea.gov.in, poechennai2@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளிலுள்ள தமிழர்களுக்கு உதவிபுரிய தமிழ்நாடு அரசின் ”அயலகத் தமிழர் நலத்துறை” செயல்பட்டு வருகிறது. வெளிநாடு தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் 1800 309 3793, 8069009901 மற்றும் 8069009900 (Missed Call No.) தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!