Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம்சமூக வலைதளங்களில் திருக்குறளுக்கு விளக்கம்: காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு

சமூக வலைதளங்களில் திருக்குறளுக்கு விளக்கம்: காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு

சமூக வலைதளங்களில் நாள்தோறும் திருக்குறளுக்கு விளக்கமளித்து வரும் காவல் உதவி ஆய்வாளரின் ஆர்வத்துக்கு தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ராசிபுரம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல் உதவியாளராக இருந்து வருபவர் இன்னாசி சவுரியம்மாள் சின்னப்பன் என்கிற சின்னப்பன் (52). சேலம் மாவட்ட செந்தாரப்பட்டியை சொந்த ஊராகக் கொண்ட இவர் ஏற்கனவே நாமக்கல், ராசிபுரம், புதுசத்திரம், ஆயில்பட்டி, மதுவிலக்கு காவல் பிரிவு போன்ற இடங்களில் தலைமைக்காவலராகவும், காவல் உதவி ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது தொடக்கக்கல்வியை செந்தாரப்பட்டி புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலை, மேல்நிலைக்கல்வியை தம்மம்பட்டி அரசு பள்ளியிலும் படித்துள்ளார். தமிழ் மீது ஆர்வம் கொண்டிருந்ததால் பின்னர் திருச்சி பெரியார் கல்லூரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் படித்து வந்தார். கல்லூரி பயிலும் போது காவல்துறை பணிக்கு வாய்ப்பு வந்ததால், 1993 முதல் காவல்துறையில் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது இவருக்கு மனஐவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

நாள்தோறும் திருக்குறள்: இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக காலைதோறும் சமூக வலைதளங்களில் திருக்குறளின் ஒரு குறள் சொல்லி, அதற்கான விளக்கத்தையும் குரல் பதிவாக குழுக்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நாள்தோறும் அறத்துப்பால், பொருட்பால்,காமத்துப்பால் என ஏதாவது ஒரு அதிகாரத்தில் இருந்து குறளை பதிவிடுவதை வழக்கமாகச் செய்து வருகிறார். திருக்குறள் மீதான இவரது ஆர்வத்தை தமிழ் ஆர்வலர்கள், உயரதிகாரிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து உதவி ஆய்வாளர் சின்னப்பன் கூறுகையில், பள்ளி காலங்களில் உயர்நிலைப்பள்ளியில் எனக்கு தமிழாசிரியராக இருந்து அப்துல்காதர் என்ற ஆசிரியர் தான் எனது திருக்குறள் மீதான ஆர்வத்துக்கு காரணம். அதனால் தான் கல்லூரியில் தமிழ் இலக்கியம் எடுத்து படித்தேன். தற்போது எனது சொந்த ஆர்வத்தின் காரணமாக மாணவர்கள், இளைஞர்கள் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் திருக்குறள் மற்றும் அதற்கான பொருள் விளக்கம் குரல் பதிவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். இதனால் சிலர் பயனடைந்தாலும் மகிழ்ச்சியே என்றார் அவர்.

திருக்குறளில் உள்ள 1330 குறளையும் முடித்து பின்னர் நாலடியார், இனியவை நாற்பது இன்னா நாற்பது போன்றவை குறித்து அனைவரும் பயனடையும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என்பது எனது விருப்பம் எனக்கூறிய அவர், கற்க கசடற கற்பவை கற்க பின் நிற்க அதற்கு தக என்பதனை தான் பின்பற்றி வருவாகவும் ஆர்வத்துடன் கூறினார். எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் என நம்மிடம் சொல்லி முடித்தார், காவல் உதவி ஆய்வாளர் சின்னப்பன்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!