நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நெய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் உறுதிபடுத்தப்படாத தகவல் உலா வந்து கொண்டுள்ளது. வைரலாக பரவும் இந்த தகவலை ராசிபுரம் நெய் உற்பத்தியாளர்கள் உறுதிபடுத்தவில்லை. மேலும் ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முயற்சிதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை குறியீடு ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்கின்றனர் ராசிபுரம் நெய் உற்பத்தியாளர்கள்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் என்றால் பட்டு, ஈரோடு என்றால் மஞ்சள், சேலம் என்றால் மாம்பழம், மணப்பாறை என்றால் முருக்கு, நெல்லை என்றால் அல்வா, ஆத்தூர் என்றால் வெத்தலை, ஊத்துக்குழி வெண்ணெய், காங்கேயம் என்றால் நாட்டு காளை மாடுகள் என ஒவ்வொரு ஊருக்கும் மண் சார்ந்த ஒரு பெருமை உள்ளது. இதே போல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் என்றால் நெய் என்பது மண் சார்ந்த பெயர் உள்ளது. இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதி என்பதால், மண் வளத்தால் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகள் தரும் பாலில் இருந்து வெண்ணெய் எடுத்து காய்ச்சும் நெய்க்கு எப்போதும் ஒரு மணம் உண்டு. அந்த வகையில் ராசிபுரம் நெய் தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் பிரசித்தி பெற்றுள்ளது. ராசிபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நெய் சேலம், கோவை, திருச்சி, மதுரை, சென்னை மட்டுமின்றி அயல்நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்பகுதியில் காலகாலமாக நெய் உற்பத்தி செய்து வரும் நெய் உற்பத்தியாளர்கள் அரசு நெய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை நெய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெறவில்லை.
புவிசார் குறியீடு கிடைத்துள்ளதா என்பதை மறுக்கும் உற்பத்தியாளர்கள்:
இந்நிலையில், ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என சமூக ஊடகங்களில் செய்து வைரலாகி வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட நெய் உற்பத்தியாளர்கள், அரசு அலுவலர்களிடம் கேட்டபோது யாரும் உறுதிபடுத்தவில்லை. சில ஊடகங்களில் வந்த தகவல் வைத்து தான் இது போல் பேசப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை என்கின்றனர் ராசிபுரம் பகுதியில் நெய் உற்பத்தியாளர்கள். இதனால் நெய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பதனை உறுதிபடுத்தாத தகவல் தான் என்கின்றனர் நெய் உற்பத்தியாளர்கள். இதற்கு புவிசார் குறியீடு பெறவேண்டுமெனில், மத்திய அரசின் தொழில்துறையின் கீழ் செயல்படும் புவிசார் குறியீட்டு பதிவாளருக்கு முறையான ஆதாரங்களுடன் விண்ணப்பித்து இதனை தொடர்ந்து புவிசார் குறியீடு பதிவு குழுவினரால் பல கட்ட நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் தான் புவிசார் குறியீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க இயலும். இதுவரை உற்பத்தியாளர்கள் சார்பில் கோரிக்கை தான் வைக்கப்பட்டுள்ளது. எனவே ராசிபுரம் நெய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தாத தகவல் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அலுவலர்களும் இந்த தகவல் உறுதிபடுத்தப்படுத்தப்படவில்லை எனக் கூறியுள்ளனர்.