காலநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு வெய்யிலின் கடும் தாக்கத்திற்கு பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் இல்லாத அளவில் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் வரும் நாட்களில் இதன் தாக்கம் மேலும் அதிகரித்தும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு வெப்ப அலை அதிகரிக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெய்யில் பாதிப்பால் பலர் வீட்டை விட்டே வெளியில் செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெய்யில் தாக்கத்தால் குடிநீருக்கு தவித்த முதியவர்: இந்நிலையில், நாமக்கல் மாவட்ட ராசிபுரம், நாமக்கல் சாலையில் உள்ள மேம்பாலம் பகுதியில் தடி ஊன்றி நடந்து சென்ற 80 வயதை கடந்த முதியவர் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல், குடிநீருக்கு தவித்தவாறு மேம்பாலத்தின் பக்கவாட்டில் இருந்த மரத்தின் சிறு நிழலில் சுருண்டு அமர்ந்திருந்தார். பேருந்து பயணத்துக்கு கூட காசு இல்லாமல், உடலில் மேலாடையும் இன்றி வறுமையில் இருந்த 80 வயதை கடந்த கருப்பண்ணன் என்ற இந்த முதியவர் ராசிபுரம் பகுதியில் இருந்து அணைப்பாளையம் வரை சுமார் 4 கி.மீ. தொலைவு நடந்தே செல்ல வேண்டும் என்றார். கடுமையான வெய்யிலில் மேற்கொண்டு நடக்க முடியாமல் தவித்து வந்ததை பார்த்து அப்பகுதியில் சென்ற இளைஞர்கள் சிலர் அவருக்கு குடிநீர் நீர் பாட்டில், குளிர்பானம், பிஸ்கட் வாங்கிக்கொடுத்தனர். பின்னர் மர நிழலில் சிறிது நேரம் இளைப்பாறி வெய்யில் குறைந்த பின்னர் பயணத்தை தொடர்ந்தார்.
நடப்பு ஆண்டில் இந்த வெய்யில் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி கத்திரி வெய்யில் துவங்கவுள்ள நிலையில், இதன் பாதிப்பு இன்னும் மே மாதம் அதிக அளவில் இருக்கும் என தெரிகிறது. வெய்யில் 105 டிகிரி தாண்டும் என தெரிவிக்கின்றனர். வருண பகவான் கருணை இருந்தால் தான் பாதிப்பில் இருந்து சற்று மக்கள் தப்பிக்க முடியும் . இல்லையென்றால், பகல் நேரங்களில் பகலவனின் கடும் சிரமத்தை மக்கள் எதிர்கொண்டாக வேண்டும். அதற்கேற்ற முன்னெச்சரிக்கை அவசியம் என்கின்றனர் பலரும்.