நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் ராசிபுரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு தாமரை மலர் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நாமக்கல், ராசிபுரம் சேந்தங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு,சங்ககிரி போன்ற பகுதிகளில் நகராட்சி, ஒன்றியம், ஊராட்சி வாரியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வருகிறார்.
ராசிபுரம் நகராட்சி 25-வது வார்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பிரதமர் மோடியின் கையெழுத்துடன் கூடிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை, பாஜகவின் சின்னமான தாமரை மலர் போன்றவற்றை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது மத்திய அரசின் பத்தாண்டுகால மக்கள் நல சாதனை திட்டங்கள் குறித்தும், ஊழலற்ற நிர்வாகம் அமையவும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
இவருடன் பாஜக கட்சியின் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளான பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை தொடர்ந்து ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.