தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ தொடர்ந்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பாவை கல்வி நிறுவனங்கள் இணைந்து வோர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் சாதனையில் இடம் பெறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன. இதில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் என மொத்தம் 8,662 பேர் பங்கெடுத்து சர்வதேச சாதனை படைத்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற ஏப்.23-ல் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குபதிவை உறுதி செய்திடும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அனைத்து தரப்பு மக்களுக்கும் வாக்களிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று வாக்குப்பதிவை பதிவு செய்திடவும். மேலும் தேர்தல் நேரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்காமூர்த்தி தலைமையில் பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி மைதானத்தில் தமிழக சட்டமன்ற பொது தேர்தல் 2026 இல் 100 சதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் சுமார் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் என 8662 நபர்கள் தேர்தல் விழிப்புணர்வுச் சின்னத்தின் மிகப்பெரிய மனித வடிவமான மாற்றுத்திறனாளிகள் மொபைல் செயலி, என் வாக்கு விற்பனைக்கு அல்ல, ஏப்ரல்-23 என ஆங்கில எழுத்திலான ஓவியங்கள் வடிவில் ஒரு சேர அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

‘தேர்தல் விழிப்புணர்வுச் சின்னத்தின் மிகப்பெரிய மனித வடிவத்தை’ உருவாக்கும் சாதனை முயற்சியாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஜனநாயக கடமையினை நிறைவேற்றுவதில் பொறுப்புணர்வுடன் கூடிய பங்கேற்பை ஊக்குவிப்பதையும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின் நிறைவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தியிடம்,வோர்ல்ட் ரெர்கார்ட்ஸ் யூனியன் நிறுவனத்தின் மேலாளர் கிறிஸ்டோஃபர் டைலர் கிராஃப்ட் , சர்வ சாதனை நிகழ்வினை உறுதிபடுத்திடும் வகையில் பதக்கம் மற்றும் சான்றினை வழங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விமலா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் முன்னிலை வகித்தனர்.





