Tuesday, February 24, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்கோழிப்பண்ணை தொழில் வளர்ச்சி போல் பட்டு வளர்ப்பு துறையிலும் நாமக்கல் மாவட்டம் வளர்ச்சி பெரும் -...

கோழிப்பண்ணை தொழில் வளர்ச்சி போல் பட்டு வளர்ப்பு துறையிலும் நாமக்கல் மாவட்டம் வளர்ச்சி பெரும் – ராசிபுரம் பகுதியில் ரூ.2.20 கோடி மதிப்பில் பட்டு கூடு ஏலம் மையம் திறப்பு விழாவில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., பெருமிதம்

நாமக்கல் மாவட்டம் கோழிப்பண்ணை தொழிலில் வளர்ச்சி பெற்றுள்ளது போல், பட்டு வளர்ப்பு துறையிலும் வளர்ச்சி அடையும் என ராசிபுரம் பகுதியில் ரூ.2.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டு கூடு ஏல மையத்தின் திறப்பு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கேஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., குறிப்பிட்டார்.

ராசிபுரம் அருகேயுள்ள ஆணைகட்டிப்பாளையம் பகுதியில் 6000 ஆயிரம் சதுரடி பரப்பில் ரூ.2.20 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகம் மற்றும் ஏல மையம் திறப்பு விழா, ரூ.50 லட்சம் மதிப்பில் பட்டு நூற்பு மற்றும் முருக்கேற்ற மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ரூ.75 லட்சம் மதிப்பில் 142 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் கி.சாந்தி, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர் பட்டு கூடு அங்காடி மற்றும் ஏல மையத்தை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினர். இதில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., பேசியது:

நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், ராசிபுரம், மோகனூர், பரமத்தி வேலூர், எலச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்பெரி சாகுபடி மற்றும் பட்டு வளர்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக் கூடுகளை தர்மபுரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் மைசூர் போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால் போக்குவரத்து செலவு மற்றும் குறைந்த விலை போன்ற பிரச்சனைகள் விவசாயிகளுக்கு ஏற்பட்டன. இதனை கருத்தில் கொண்டு, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிக்கிணங்க, 2021ஆம் ஆண்டு ஆட்சி அமைந்ததும் ராசிபுரத்தில் பட்டுக்கூடு ஏலம் மையம் தற்காலிக இடத்தில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் கிலோ அளவில் பட்டு ஏலம் நடைபெற்ற நிலையில், தற்போது அது ஒரு லட்சம் கிலோவாக உயர்ந்துள்ளது. விவசாயிகள் கோரிக்கையின்படி, மின்னணு ஏல முறை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியையும் சேர்த்து ரூ.2.20 கோடி மதிப்பில் நிரந்தர பட்டுக்கூடு ஏல மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அங்காடி மூலம் வெளிமாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் ஏலத்தில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடைக்கு நியாயமான அதிக விலை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த மையத்தின் மூலம் சுமார் ரூ.20 கோடிக்கும் அதிக மதிப்பில் பட்டு ஏலம் நடைபெற்றுள்ளது. மேலும், அரசு சார்பில் பட்டு நூற்பாலை மற்றும் முருக்கேற்றம் மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் அதற்கான அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் அரசே நேரடியாக ஏலத்தில் பங்கேற்று பட்டுக்கூடுகளை கொள்முதல் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதால், பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். எதிர்காலத்தில், ராசிபுரம் பட்டுக்கூடு அங்காடி தர்மபுரி போன்ற பகுதிகளில் உள்ள மையங்களைப் போல புகழ்பெற்ற சந்தையாக வளர்ச்சியடையும். பட்டு வளர்ச்சித்துறை இணை இயக்குனர் செ.பொன்மாரி, மண்டல துணை இயக்குனர் சி.ரெ.நிஷா, உதவி இயக்குனர் கி.நிஷாந்தி, அட்மாக்குழுத் தலைவர் கே.பி.ஜெகந்நாதன் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!