கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டத்துக்கென எந்தவித தொழிற்சாலைகளையும் கொண்டுவராமல் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள டைடல் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என அதிமுகவினருக்கு கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி.,கேள்வி எழுப்பியுள்ளார். ராசிபுரம் ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் திமுக அரசு டைடல் பூங்கா பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் ராசிபுரம் பஸ் நிலையம் முன்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் ரூ.2.89 மதிப்பில் சாலை அமைக்கும் திட்டப்பணிகள் தொடங்கி வைத்து கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., பேசினார். அப்போது பொதுமக்களிடையே அவர் பேசியது:
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் 600 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது. ஆனால் அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் அமைச்சராக இருந்து பி.தங்கமணி எந்தவித தொழிற்சாலையும் கொண்டுவராமல் தற்போது பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டைடல் பார்க் திட்டத்தை எதிர்ப்பது ஏன். தொழிற்துறை அமைச்சராக இருந்த அவர் குமாரபாளையம் தொகுதிக்கு கூட எந்த தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. மாறாக தற்போதும் அவர் எம்எல்ஏ-வாக உள்ள குமாரபாளையம் தொகுதியில் தான் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. இதற்கு வறுமை தான் காரணம். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போன்றவை அதிமுக ஆட்சியில் நடந்ததை தடுக்கவில்லை. ஆனால் டைடல் பார்க் அமைந்தால் பாதுகாப்பு இருக்காது என கூறுகின்றனர். டைடல் பார்க் அமையும் இடத்திற்கும், கல்லூரி நுழைவு வாயிலுக்கு சம்பந்தம் இல்லை என்றார்.
தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களுக்கான, 70 சதம் சாலை வசதிகள், நலத்திட்ட உதவிகளும் முழு வீச்சில் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி வருகிறோம். கரோனா காலத்தில்ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயணம் வசதி மகளிருக்கு அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் தகுதி உள்ள யாருக்கும் விடுபடாமல் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் படித்து முடித்த கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மகளிர்க்கு நகை கடன் தள்ளுபடி, ஏழை எளிய மாணவ மாணவியர் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விக்கு சேர்வதற்கு 7.5 சத இட ஒதுக்கீடு, கல்வி கட்டணம் ஆகியவற்றை அரசே வழங்குகிறது. இதன்மூலம் ஒரு லட்சம் மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ., கே.பி.ராமசாமி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.





