அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள வேங்கைமரத்து நாச்சியாயி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ., சி.சந்திரசேகரன் ஏற்பாட்டில் கொல்லிமலை அடிவாரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ள சிறப்பு பெற்ற சக்தி வாய்ந்த வேங்கைமரத்து நாச்சியாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக மலைவாழ் மக்களின் முக்கிய தெய்வமான வேங்கை மரத்து நாச்சியாயி அம்மனுக்கு சந்தனம், திருநீர், குங்குமம், பன்னீர், பால், தயிர், மலைத்தேன், இளநீர் போன்ற வாசனை பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிட்டு கட்சித்தொண்டர்கள், பொதுமக்கள், மலைவாழ் மக்கள் என இதில் பங்கேற்ற சுமார் 3 ஆயிரம் பேருக்கு கிடா விருந்தளிக்கப்பட்டது. பின்னர் கட்சியினர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என அம்மனுக்கு வேண்டுதல் நடத்தி கோவில் பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கினர்.

இந்த சிறப்பு பூஜையில் நாமக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் என்.மயில்சுதந்திரம், ஜி.பி.ஸ்ரீபாலன், சேந்தமங்கலம் பேரூர் அதிமுக செயலர் ஆனந்த், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலர் ராஜா, சீராப்பள்ளி பேரூர் முன்னாள் செயலர் நாகசந்திரன், ராகுல், சிவபாலன், ரோகித், ரஞ்சித், யுவராஜ், ராஜ்குமார்,சிவக்குமார், பழனிமுத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.





