ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் ரூ.35 கோடி மதிப்பில் 600-க்கும் மேற்பட்ட மின் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் மினி டைடல் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காணொளி வாயிலாக அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து ராசிபுரத்தில் நடைபெற்ற பணிகள் தொடக்க நிகழ்ச்சியில், தமிழக ஆதி திராவியர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்துப் பேசினர்.

இதில் அமைச்சர் மா.மதிவேந்தன் பேசுகையில், தமிழக முதல்வர் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் படித்த இளைஞர்களின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில், தமிழக முதல்வர் 2023-24 மானிய கோரிக்கையின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக்துறையின் சார்பில், ராசிபுரம் வட்டத்தில் சுமார் ரூ.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக, மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த மினி டைடல் பூங்கா 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் அமையவுள்ளது. இதில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்கள் சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படுவதோடு, மாவட்டத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் விழாவில் பேசுகையில், 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை தரமணியில் டைடல் பார்க் ஏற்படுத்தி மென் பொருள் புரட்சியை ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆவார். அவரை தொடர்ந்து தற்போதைய முதல்வர் தமிழக வளர்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கருதி மென்பொருள் நிறுவனங்கள் வேலை வாய்ப்பிற்கு பெரிய நகரங்களை நோக்கு இளைஞர்கள் செல்வதை மாற்றி ஆங்காங்கே இருப்பவர்களுக்கு அதே பகுதியில் வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என மினி டைடல் பார்க் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து சேலம், திருவண்ணாமலை போன்ற இடங்களை தொடர்ந்து ராசிபுரத்தில் மினி டைடல் பார்க் அமைகிறது. இதனால் இப்பகுதி வளர்ச்சி பெறுவதுடன், வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, அட்மாக்குழுத் தலைவர் கே.பி.ஜெகந்நாதன், ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், திருவள்ளுவர் அரசுக் கல்லூரி முதல்வர் அ.யூசுப்கான், மினி டைடல் பார்க் செயற்பொறியாளர் உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





