ராசிபுரம் ஆண்டகளூர்கேட் பகுதியில் அமையவுள்ள மினி டைடல் பார்க் ராசிபுரம் பகுதியின் வளர்ச்சி, மாணவர்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு தான் இப்பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளது என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி வளாகத்தில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று (நவ.5-ல்) தொடங்கப்படவுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருவள்ளுவர் கல்லூரி வளாகத்தில் டைடல் பார்க் அமையவுள்ள இடத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது.
நாமக்கல் மாவட்டம் அதிக பொறியியல், கலை கல்லூரிகள் உள்ள மாவட்டம். மாவட்டத்தில் மென் பொருள் பொறியாளர்கள் அதிகம் உள்ளனர். இப்பகுதியில் உள்ள மென் பொறியாளர்கள், புதியதாக பட்டம் பெற்று வரும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனும், நானும் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் ராசிபுரம் பகுதியில் மின் டைடல் பார்க் அமைக்க வேண்டும் என நேரில் கோரிக்கை வைத்தோம். இதனையடுத்து திருவள்ளுவர் அரசு கல்லூரியின் ஒரு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை காணொளியில் தமிழக முதல்வர் திறந்து இன்று (நவ.5) வைக்கிறார். டைடல் பார்க் ரூ.37 கோடியில் அமைகிறது. இது அமைந்தால் 600-க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுமார் மூணரை ஏக்கர் பரப்பில், 63 ஆயிரம் ச.அடி கட்டிடத்தில் டைடல் பார்க் மூன்றடுக்கு தளம் கொண்டதாக அமைக்கப்படும். இது இப்பகுதி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
முன்னாள் அமைச்சர் பி.தங்கமணிக்கு பதில்:
மேலும் திருவள்ளுவர் கல்லூரி வளாகத்தில் விளையாட்டு மைதானத்தில் டைடல் பார்க் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்திருந்தார். மேலும் இதனை எதிர்த்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவோம். நீதிமன்றம் செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இதில் இல்லை என்றார்.
விளையாட்டு மைதானத்துக்கு மாற்று இடம்:
கல்லூரியின் ஒரு பகுதியில் அமைக்கப்படும் டைடல் பார்க் மாணவர்கள் பாதுகாப்புக்கு கேள்வி குறியாக இருக்கும் என பி.தங்கமணி தெரிவித்திருந்தார். இந்த கல்லூரி 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நிலையில், கல்லூரி கட்டிடங்கள் 5 ஏக்கர் நிலப்பரப்பில் தான் செயல்பட்டு வருகிறது. மீதி 30 ஏக்கருக்கு மேல் எந்த பயன்பாடும் இல்லாமல் உள்ளது. கல்லூரி வளாகத்தில் இரவு நேரங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளும் நடைபெறுவதும் நடந்து வந்துள்ளது. மேலும் தற்போது அமையவுள்ள டைடல் பார்க் நுழைவு வாயிலுக்கும், கல்லூரி நுழைவு வாயிலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இரண்டும் வேறு வேறு திசையில் உள்ளது. சுற்றுச்சுவர் அமைக்கப்படும். முற்றிலும் பாதுகாப்பாக அமைக்கப்படும். கல்லூரியின் வி்ளையாட்டு மைதானம் வேறு மாற்று இடத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்படும் என்றார்.
திமுக ஆட்சியில் ராசிபுரம் பகுதிக்கு தனி குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துமனை கொண்டுவரப்பட்டுள்ளது.போதமலைக்கு சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது டைடல் பார்க் கொண்டுவரப்பட்டு இதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. எதிர்காலத்தில் இங்குள்ள மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என கருதி டைடல் பார்க் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்பகுதியில் மாணவர்கள் அனைவரும் மென் பொருள் வல்லுநராக ஆக உருவாக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஏற்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வரவேற்பு அளிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது என்றார்.
இந்த டைடல் பார்க் அமைந்தால் இக்கல்லூரி மட்டுமல்லாமல் வேறு கல்லூரி மாணவர்களும் சுமார் 600 க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள். டைடல் பார்க் என்பது போக்குவரத்து வசதி மிகுந்ததாக, தங்குவதற்கு வசதியுள்ளதாக, விமான போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இது சேலம்,திருச்சி, சென்னை, கோவை, பெங்களூர் சாலையை இணைக்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்படுவதால், இது சரியான தாக இருக்கும் என இந்த இடத்தை தேர்வு செய்துள்ளார்கள். இந்த திட்டம் வெற்றி பெற்றால் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட இங்கு தங்களது நிறுவனத்தை தொடங்கும் என்றார்.
பேட்டியின் போது ராசிபுரம் நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர், ராசிபுரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கே.பி.ஜெகந்நாதன்,திமுக மாணவரணி சத்தியசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





