தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ‘நாமக்கல் 360’ எனும் செயலி தொடக்கவிழா பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் இன்று நடைபெற்றது. பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராயல் பத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து நாமக்கல் 360 செயலியை தொடங்கி வைத்து பேசிய பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், ஆன்லைன் வர்த்தக போட்டியை சிறு, குறு வணிகர்கள் எதிர்கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது எனவும், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் அவர்கள் எதிர்பார்க்கும் சலுகைகளுடன் உள்ளூர் வணிகர்கள் மூலம், அன்றைய தினமே வாடிக்கையாளர்களின் வீடு வந்து சேரும் எனவும் தெரிவித்தார். மேலும் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நாமக்கல் 360 செயலியை வடிவமைத்த போகோஸ் இன்னோவேசன்ஸ் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் தமிழ்குமரன் செயலியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள், பேரமைப்பின் இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வணிக பெருமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பேரமைப்பின் நாமக்கல் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரிஸ்வான் நன்றி கூறினார்.





