Tuesday, September 16, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ரூ.139.65 கோடி மதிப்பில் போதமலைக்கு சாலை அமைக்கும் பணி: மண்பாதையில் மலை கிராமத்துக்கு நேரில் சென்று...

ரூ.139.65 கோடி மதிப்பில் போதமலைக்கு சாலை அமைக்கும் பணி: மண்பாதையில் மலை கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி.,

போதமலை பகுதிக்கு ரூ.139.65 கோடி மதிப்பில் மண் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மலை கிராமத்துக்கு நேரில் சென்று சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். மேலும் அங்குள்ள கோவிலில் முதல் மரியாதை அளிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகளையும் நடத்தி, மலை வாழ் மக்களுடன் அமைச்சர், எம்பி., ஆகியோர் உணவறிந்தனர்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சிக்குட்டபட்ட கீழுர் ஊராட்சியில் போதமலை மலை கிராமம் உள்ளது. போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை இந்த மூன்று குக்கிராமங்கள் உள்ளன. இதில் ஏறத்தாழ 900-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமங்களுக்கு செல்ல இதுவரை சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தது. ஒற்றையடி பாதையில் தான் செல்ல வேண்டும். சாலை அமைக்க மத்திய அரசின் அனுமதி பெறுவதில் சிக்கல் இருந்து வந்தது. இதனையடுத்து, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி என்பவர் வழக்கு தொடர்ந்ததையடுத்த பசுமை தீர்ப்பாயம் சாலை அமைக்க அனுமதியளித்தது. இதனையடுத்து மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று, சாலை அமைக்கும் பணிகள் தொடங்க திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

70 சதம் பணிகள் நிறைவு

மேலும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையினை ஏற்று நபார்டு வங்கி கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், மொத்தம் ரூ.139.65 கோடி போதமலைக்கு சாலை அமைக்க கடன் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான அரசு ஆணை கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு,17-ம் தேதி வெளியிடப்பட்டு, இதன் மூலம் வடுகம் முதல் மலை கிராமமான கீழூர் வழியே மேலூர் வரை 21.17 கி.மீ., தொலைவிற்கும், புதுப்பட்டி முதல் கெடமலை வரையிலும் 9.90 கி.மீ. தொலைவிற்கும் என மொத்தம் 31.07 கிமீ தொலைவிற்கு புதியதாக சாலை மண் சாலை தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் தற்போது 70 சதம் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் முழுமையாக முடிவடைந்தால் இதன் மூலம் அம்மக்களின் விளை பொருட்கள் சந்தைக்கு கொண்டு செல்லும் வசதி ஏற்படும் என்பதால் உரிய விலை கிடைப்பதுடன், மருத்துவ வசதி, மமாணவர்களுக்கு உயர் கல்வி வசதியும் கிடைக்கும்.

மக்களிடம் குறை கேட்பு

இதனையடுத்து அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் கீழூர் வரை 9 கி.மீ. தொலைவிற்கு மலை கிராமத்துக்கு மண் பாதையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கீழூர் மலை கிராம மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் மலைவாழ் மக்களிடம் நாடு சுதந்திரம் பெற்று, இதுவரை சாலை வசதி இல்லாத இந்த மலை கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்ததில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் பங்கு குறித்து கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., மலைவாழ் மக்களிடம் பேசினார். பின்னர் அங்குள்ள அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் வெண்ணந்தூர் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!