அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செப். 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என, முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் வி.சரோஜா, பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. ,சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ., கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசியதாவது:
வரும், 2026 சட்டசபை தேர்தலை தொடர்ந்து, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், கட்சி பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில், வரும், 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தினமும், மூன்று தொகுதிகள் சென்றால்தான், அக்டோபர் மாதம் இடையில் தமிழகத்தில் உள்ள முழு தொகுதிகளிலும் சுற்றுப்பயணத்தை முடிக்க முடியும்.
முதல் நாளான, வரும் 18ம் தேதி, ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியிலும் 19ல், நாமக்கல், ப.வேலூர் தொகுதியிலும், 20ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம், பொதுமக்கள் சாரை சாரையாக வருகின்றனர். இதைப் பார்க்கும்போது, 2026ல், இ.பி.எஸ்., தலைமையில் பொற்கால ஆட்சி அமைப்போம் என, மக்கள் முடிவு செய்துள்ளனர் என்பதையே காட்டுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில், அனைவரும் கடினமாக உழைத்த காரணத்தால்தான், மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். வரும் காலத்தில், நிச்சயமாக நல்ல கூட்டணி அமையும். மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும் நாம் உறுதியாக வெற்றி பெற்று இ.பி.எஸ்., காலடியில் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார். அமைப்பு செயலாளர் ஏ.ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கலாவதி, பொன் சரஸ்வதி, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ராகா. சு.தமிழ்மணி, மாவட்டப் பேரவை செயலாளர் இ.ஆர்.சந்திரசேகர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே பி எஸ் சுரேஷ்குமார், மாநில வர்த்தக அணி இணைச்செயலர் ஸ்ரீதேவிமோகன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.