ராசிபுரம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஆர்.சீனிவாசன் மீது செவ்வாய்க்கிழமை நடந்த நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். முதலமைச்சரின் முகாமில் வழங்கப்பட்டு மனுக்கள் மீதும் கூட காலதாமதம் செய்வதாகவும் புகார் கூறுகின்றனர். இவர் மீது பல முறை புகார் கொடுத்தும் மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுவதாகவும், பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ராசிபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் நகர மன்றத் தலைவர் ஆர்.கவிதாசங்கர் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கோபிநாத் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் பழனிசாமி, சாரதி உள்ளிட்ட பலர் தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென வலியுறுத்திப் பேசினார். மேலும் நகராட்சி வருவாய் பிரிவில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக ராசிபுரம் நகராட்சி வருவாய் பிரிவில் பொதுமக்கள் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்வதால், பொதுமக்களிடம் மக்கள் பிரதிநிதிகள் பதலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது குமறல்களை வெளிப்படுத்தினர்.

ராசிபுரம் நகராட்சி வருவாய் பிரிவில் ஆய்வாளராக உள்ள ஆர்.சீனிவாசன், பெயர் மாற்றம், புதிய வரி விதிப்பு போன்றவற்றிற்கு தன்னிடம் நேரிடையாக வரும் விண்ணப்பங்கள் மீது மட்டும் பேரம் பேசி முடிவுக்கு வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், இவரது பேரத்துக்கு கட்டுப்படாத விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுவதாவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் நகர்மன்றத் தலைவர் கூட பரிந்துரைக்கும் விண்ணப்பங்கள் மீது காலதாமதம் செய்வதாகவும் கூறுகின்றனர்.
மேலும் நகர்மன்றத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் வரும் விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் வைப்பதாகவும் கடந்த ஒராண்டுகளாக புகார் கூறப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் விண்ணப்பித்தவர்களிடம் எதிர்பார்த்து காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் பல இடங்களில் வரி விதிப்பு, வரி மாற்றம், பெயர் மாற்றம் போன்றவற்றிற்கு பெரும் தொகை பெற்றுக்கொண்டு தான் வருவாய் ஆய்வாளரால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். இவரது போர்டலில் மட்டும் பலமாதங்களாக அப்ரூவல் ஆகாமல் விண்ணப்பங்கள் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளன. கேட்டால் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட மேலதிகாரிகளுக்கு பார்க்க வேண்டியுள்ளது எனக்காரணம் கூறி பெரிய அளவில் எதிர்பார்த்து காலம் தாழ்த்தி வருகிறாராம். மேலும் தினசரி சந்தைக்கு புதியதாக கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடும் பிரச்சனையில், இவரது தலையீட்டால் ஏலம் விடப்படாமல் நகராட்சி பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நகராட்சி வரி வசூல் பிரச்சனையில் சரிவர பணி மேற்கொள்ளாமல் நகராட்சியின் வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நகராட்சி செலவுக்கு பற்றாக்குறை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறுகின்றனர் நகர்மன்ற உறுப்பினர்கள்.
இதுகுறித்து நகர்மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கோபிநாத்-யை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தொடர்பில் அவர் கிடைக்கவில்லை. இதே போல் வருவாய் ஆய்வாளர் ஆர்.சீனிவாசனிடம் அலைபேசியில் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, எனக்கும் நகர்மன்றத் தலைவருக்கும் ஒத்துப்போகாது. அதனால் என்மீது குற்றம் சாட்டுகின்றனர். எனக்கு வெளியில் வேறு வேலை கொடுக்கப்பட்டதால், இன்றைய நகர்மன்றக் கூட்டத்தில் பங்கேற்க வில்லை. இன்று கூட 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆணையாளரால் கையெழுத்தாகியுள்ளது. மேலும் புகார் தொடர்பாக நேரில் பேசுவோம் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக நகராட்சியில் நிரந்தரமான ஆணையாளர் இல்லாத காரணத்தால் பொதுமக்களின் விண்ணப்பங்கள் மீதுஉடனடி தீர்வு ஏற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏழை எளிய மக்களிடம் கூட தங்களின் வீட்டின் வரி விதிப்பின் பெயர் மாற்றத்துக்கூட பல ஆயிரம் செலவளித்து 6 மாதம் காத்திருந்து போராடி பெற்ற அவல நிலையும் கூட இருந்து வருகிறது. தற்போது தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் மக்களின் விண்ணப்பத்தின் மீது வெளிப்படை தன்மை ஏற்பட்டால் மட்டுமே நகராட்சியில் இது நிலையில் சற்று மாறுதல் கிடைக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பல விண்ணப்பங்கள் ஏதோ பெரிய அளவில் எதிர்பார்த்து வருவாய் ஆய்வாளர் நிலையில் கிடப்பில் உள்ளது குறித்தும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்திட வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.