Saturday, August 30, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியில் லோக்பால் - லோக்ஆயுக்தா குறித்த கருத்தரங்கு -...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியில் லோக்பால் – லோக்ஆயுக்தா குறித்த கருத்தரங்கு – டாக்டர் வீ.ராமராஜ் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் லோக்பால் மற்றும் லோகயுக்தா விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் டாக்டர் ஏ.யூசுப் கான் தலைமையிலும் பேராசிரியர்கள் ஆர். சிவக்குமார், பி. கிருஷ்ணம்மாள் முன்னிலையிலும் நடைபெற்றது. ஊழல் என்பது தனிமனித உரிமை மீறல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் உரிமை மீறலாகும் என்று கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் குறிப்பிட்டார். திருவள்ளுவர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை – அரிஸ்டாட்டில் மன்றம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியதாவது.

கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஒப்பந்தமானது கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 14 முதல் நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் இந்தியா ஏற்றுக்கொண்டு கையொப்பம் செய்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமும் கடந்த 2013 ஆம் ஆண்டில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டமும் இந்தியாவில் இயற்றப்பட்டது.

ஊழல் தனி மனித உரிமை மீறல்:

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப்படி வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் தனிமனித கௌரவம் ஆகியன தனிமனித உரிமைகளாகும். பொது நிதியை ஊழல் மூலம் தனிநபர்கள் அபகரிப்பதால் மக்களுக்கான திட்டங்களுக்கு செலவு செய்ய வேண்டிய அரசின் பணம் திசை திருப்பப்படுகிறது. இதனால், அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளும் சிவில் மற்றும் கலாச்சார உரிமைகளும் பாதிக்கப்படுகின்றன. ஊழல் என்பது தனிமனித உரிமைகளுக்கு எதிரான, ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளுக்கு எதிரான மீறலாகும் என ராமராஜ் தெரிவித்தார்.

ஊழல் மனித குலத்தின் மீதான தாக்குதல்:

ஊழல் சட்டத்தின் ஆட்சி மீது தாக்குதல் நடத்துவதோடு மக்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. சமூகத்தில் சமத்துவமற்ற நிலையை உருவாக்கி மக்களின் அமைதியை ஊழல் சீர்குலைக்கிறது. ஊழலை ஒழிக்காமல் மக்களிடையே மகிழ்ச்சியையும் உலகில் அமைதியையும் ஏற்படுத்தி விட முடியாது. ஊழல் தனிமனித உரிமை மீறல் மட்டுமல்ல, மனித குலத்துக்கு எதிராக நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாகும் என அவர் கூறினார்.

ஊழல் தடுப்பு காவல் பிரிவால் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வழக்குகளை 1988 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன. பிரதமர், மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் முதல் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதை போலவே, முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அரசின் உயர் அதிகாரிகள் முதல் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா செயல்பட்டு வருகிறது.

லோக் ஆயுக்தா என்றால் ஊழல் ஊழலுக்கு எதிரான மாநில அளவிலான உயர் விசாரணை அமைப்பாகும். அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைக்கான அமைப்பு லோக் அதாலத் ஆகும். லோக் ஆயுக்தா என்பதற்கும் லோக் அதாலத் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ராமராஜ் கேட்டுக்கொண்டார். இந்த கருத்தரங்கத்தை திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையும் அரிஸ்டாட்டில் மன்றமும் ஏற்பாடு செய்திருந்தது. விழாவில் உதவி பேராசிரியர் கே.செந்தில்குமார் வரவேற்புரையும் உதவி பேராசிரியர் எஸ்.ஜெயக்குமார் நன்றி உரையும் கூறினர். மேலும் கருத்தரங்கில் ராசிபுரம் வழக்குரைஞர் சிவலீலாஜோதி, பேராசிரியர்கள் ஆர்.சேகர், கே.மாதேஸ்வரன், கெளரவ விரிவுரையாளர்கள் டி.லோகநாயகி, எஸ்.பி.செல்வமணி, எம்.சதீஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!