லோக் ஆயுக்தா என்றால் ஊழல் ஒழிப்பு, லோக் அதாலத் என்றால் சமரசம். 46 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் விளக்கம்
பழனி அருகே உள்ள ஐடிஓ மேல்நிலைப் பள்ளியில் 46 ஆண்டுகளுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் சந்திப்பு பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பி. உதயகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் சி. ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லோக் அதாலத் என்பதற்கும் லோக் ஆயுக்தா என்பதற்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை என்று இந்நிகழ்ச்சியில் பேசிய லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது.
பணமும் அசையா சொத்துக்களும் எவ்வளவு முக்கியமானதோ அதைப்போல ஒவ்வொரு மனிதருக்கும் நேரமும் நல்ல நட்பும் வட்டாரமும் முக்கியமான சொத்துக்களாகும். நல்ல நட்பை அடையாளம் காணவும் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு பள்ளிகளும் படித்த முன்னாள் மாணவர்கள் குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை சந்திப்பது அவசியமாகும் என்று ராமராஜ் வலியுறுத்தினார்.
தாங்கள் படித்த பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்களை செயல்படுத்தவும் குழந்தைகள் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு, ஊழல் எதிர்ப்பு அரசியல் விஞ்ஞானம் உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு கருத்துக்களை பள்ளி மாணவர்களுடைய வளர்க்க பள்ளிகளில் ஆண்டுதோறும் சொற்பொழிவுகளை நடத்தும் வகையில் அறக்கட்டளைகளை முன்னாள் மாணவர்கள் அமைக்கவும் முயற்சிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தாங்கள் படித்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் போதை பொருள்களுக்கு பொருள்களுக்கும் இணையதள பயன்பாடுகளுக்கும் அடிமையாவதை தடுக்கவும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுக்கவும் கண்காணிப்பு குழுக்களை படித்த பள்ளிக்கான கண்காணிப்பு குழுக்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் வருங்கால சமுதாயமான குழந்தைகளை நல்ல முறையில் வழி காட்ட உதவுவது ஒவ்வொரு பள்ளியிலும் படித்த முன்னாள் மாணவர்களின் கடமையாகும் என்று ராமராஜ் தெரிவித்தார்.
ஒவ்வொரு பள்ளியிலும் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு வயதாகிவிட்டது இனி என்ன செய்வதற்கு இருக்கிறது என்று கருத வேண்டியதில்லை. இன்னும் நமக்கு அதிக வயதாகிவிடவில்லை. இதுவரை எப்படி இருந்திருந்தாலும் இனியும் வேலைகளை சாதிக்க முடியும். 50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தவர்கள் பெரிய அரசியல் பதவிகளை அடைந்துள்ளார்கள் என்பதற்கும் புதிய தொழிலை தொடங்கியவர்கள் வெற்றியாளர்களாக மாறி இருக்கிறார்கள் என்பதற்கும் பல உதாரணங்கள் உண்டு என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கீழ்நிலை அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டும். பெரும்பாலானோர் லோக் ஆயுக்தா என்பதை லோக் அதாலத் என்றே கருதுகின்றனர். லோக் அதாலத் என்பது ஒவ்வொரு ஊரிலும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை சமரசம் மூலம் முடித்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தும் அமைப்பாகும். ஆனால், லோக் ஆயுக்தா என்பது ஊழலுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் மாநில அளவிலான அமைப்பாகும் என்று ராமராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். முன்னதாக பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அழகிரிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னாள் மாணவர்களான எல்ஐசி முகவர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், தொழில் முனைவோர் ஜாபர் அலி, லைக் அலி மீரான் உள்ளிட்ட பலரும் பேசினார்கள். இறுதியாக கருப்புசாமி நன்றி உரையாற்றினார்.