நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் நிதி நிறுவன உரிமையாளர் கூலிப்படையினரால் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் -– மோகனுார் சாலையில் உள்ள ஈச்சவாரி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (40). இவர் நாமக்கல் சேலம் சாலையில் நிதி நிறுவனம் நடந்தி வந்தார். வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. அதேபோல், அரசு டெண்டர் எடுத்து உயர்மட்ட மின் கோபுர விளக்கு பொருத்தும் பணியிலும் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் உடற்பயிற்சிக்காக ஜிம்மிற்கு சென்று விட்டு காலை 11 மணி அளவில் நாமக்கல்லில் இருந்து தனது ஆக்டிவா ஸ்கூட்டரில், முட்டை, ஆட்டு இறைச்சி வாங்கிக்கொண்டு, ஈச்சவாரியில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டுக்கு, 200 மீட்டர் துாரத்தில் சரக்கு வந்து காத்திருந்த, 4 பேர் கொண்ட கூலிப்படையினர், அருள்தாஸின் ஸ்கூட்டியை வழிமறித்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர்.
இதனையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்த கூலிப்படையினர் ஆயுதங்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றனர். நாமக்கல் – மோகனுார் சாலை, அணியாபுரம் அருகே உள்ள கொங்களத்தம்மன் கோவில் அருகே சென்றபோது, சரக்கு ஆட்டோ நின்று விட்டது. ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு, கீழே இறங்கிய கூலிப்படையினர், தப்பியோடி தலைமறைவாகினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அருள்தாசை மீட்டு, அப்பகுதியினர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கூலிப்படையினர் விட்டு சென்ற சரக்கு ஆட்டோ, அதில் இருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். உயிரிழந்த அருள்தாஸிற்கு பிரேமா என்ற மனைவியும், மித்திரன் என்ற 7 வயது மகனும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக அருள்தாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து கூலிப்படையினரை தேடி வருகின்றனர். மேலும் இவரது கொலைக்கு யார் என்ன காரணம் என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டப்பகலில், நிதி நிறுவன அதிபரை கூலிப்படையினர் வெட்டி கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.