ராசிபுரம் அருகேயுள்ள கோனேரிப்பட்டி பகுதியில் வலையில் சிக்கி தவித்த சாரை பாம்பினை பிடித்து விளையாடிய நிகழ்ச்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

கோனேரிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராம்குமார், முன்னாள் திமுக நகர்மன்ற உறுப்பினர். இவரது வீட்டின் வெளிப்புற கம்பி வேலியில் இரவு நேரத்தில் நுழைந்த 6 நீள சாரைபாம்பு நீண்டநேரமாக சிக்கிதவித்துள்ளது. இதனை பார்த்த ராம்குமார் அதனை மீட்டுள்ளார். கம்பிவேலியில் சிக்கியதால் காயமடைந்த பாம்பிற்கு மஞ்சள் தடவி சிகிச்சையளித்து பின்னர், தனது குடும்பத்தினர், அருகில் குடியிருப்பில் இருந்த குழந்தைகளிடம் காட்டி விளையாடிக்கொண்டிருந்தார். இந்த சாரை பாம்பு விஷம் குறைந்த வகையை சேர்ந்தது என்பதனை எடுத்துக்கூறி அங்கிருந்த சிறுவர், சிறுமியர்கள், பெண்களிடம் கையில் கொடுத்து தைரியப்படுத்தினார். இதனை அனைவரும் கையில் பிடித்து விளையாடியதால் சுற்றியிருந்தவர்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர். பின்னர் இதனை கோனேரிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதிக்கு சென்று நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று விட்டனர்.