திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல் அரங்கங்களில் வெளி மாவட்ட வியாபாரிகள் கண்காட்சி என்கிற பெயரில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் உள்ளூர் வணிகர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் த.ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்க தலைவர் கருமலை, செயலாளர் சிவசிதம்பரம் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் முறையாக அரசின் அனுமதி பெற்று ஆயிரக்கணக்கான வணிகர்கள் வணிகம் செய்து வருகின்றனர். வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல் அரங்கங்களில் தற்காலிக கடைகள் அமைத்து வணிகம் செய்து வருகின்றனர். இதனால் உள்ளூர் வணிகர்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு அடைகின்றனர்.
இது போன்ற தற்காலிக கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், திருமண மண்டபங்களில் வணிக ரீதியாக எந்த ஒரு நிகழ்வும் நடத்த கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நீதிமன்ற உத்தரவினை மாவட்ட ஆட்சியரிடம் சுட்டிக்காட்டி மனு அளித்த வணிகர் சங்கத்தினர், நீதிமன்ற உத்தரவின்படி வரும் காலங்களில் திருமண மண்டபங்கள், ஹோட்டல் அரங்கங்களில் கண்காட்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது என கேட்டுக் கொண்டனர். மேலும் நகரில் காலிமனைகள் உள்ளிட்ட பல இடங்களில் கண்காட்சிக் கடைகள் என்கிற பெயரில் அமைக்கப்படும் திடீர் கடைகளுக்கு உடனடியாக தடை விதித்து உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், உள்ளூர் கடைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் குடும்பங்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.