ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் வந்து மனு கொடுத்த நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஆதரவாக திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு வார்டுகளின் பொதுமக்களும், பெண்களும் ஊர்வலமாக திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

ராசிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசல், நகர விரிவாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புறவழிச்சாலை பகுதியில் அமைக்க நகராட்சி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பேருந்து நிலையம் மாற்றும் முடிவுக்கு அதிமுக, பாமக, மதிமுக, மக்கள் தன்னுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளும், ராசிபுரம் மக்கள் நலக்குழு, பேருந்து நிலையம் மீட்புக்குழு உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள், மனு அனுப்பும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதல் பேரில் இது குறித்து பொதுமக்களின் கருத்து கேட்டு முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு உத்திரவிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ஏற்பாட்டில் அனைத்து வார்டு பகுதியின் பொதுமக்கள் பலர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிராக ஆட்சேபனை மனுவினை திங்கள்கிழமை நகராட்சியில் வழங்கினர். இதனை தொடர்ந்து நகரின் வாகன நெரிசல், எதிர்கால நகர மக்கள் தொகை பெருக்கும் போன்றவற்றை கருத்தில் கொண்டு புறநகர் பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைப்பது அவசியம் என வலியுறுத்தி திமுக நகரச் செயலர் என்.ஆர்.சங்கர் தலைமையில் நகரின் பல்வேறு வார்டு பொதுமக்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து நகராட்சி ஆணையர் கோபிநாத் வசம் நேரில் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் பேருந்து நிலையம் மாற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டே நகராட்சி அலுவலகம் முன்பாக திரண்ட பொதுமக்கள், பெண்களிடம் விளக்கிப் பேசினார்.

பேருந்து நிலையம் இடம் மாற்றம் செய்யக்கூடாது என சில தரப்பினர் திரளாக வந்து மனு அளித்த நிலையில், பேருந்து நிலையம் மாற்றம் வேண்டும் என மற்றொரு தரப்பினர் மனு அளித்தனர் குறிப்பிடத்தக்கது.