வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி குறிப்பிட்டார்.
நாமக்கல் மாவட்டஅதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் பகுதியில் திமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் அக்கரைப்பட்டி எம். கண்ணன் தலைமை வகித்தார்.
இப்பொதுக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் வி.பி.பரமசிவம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
இதில் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேசியதாவது: தற்போது நடந்து வரும் திமுக ஆட்சியில் அரசு போதை பொருள் விற்பவர்களுக்கும், கள்ள சாராயம் விற்பவர்களுக்கும் ஆதரவாக இருக்கிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளதே இதற்கு உதாரணம். இதனால் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக அளவில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளன. இந்த அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச லாப்டாப், மதிவண்டி திட்டம், ஸ்கூட்டர் திட்டம் போன்றவற்றை நிறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி கந்தசாமி, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஸ்ரீ தேவி பி.எஸ். மோகன், வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் எஸ்.என்.கே.பி.செல்வம், நாமக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வழக்குரைஞர் இ.ஆர்.சந்திரசேகர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.பி.எஸ் சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ.வி.பி.முரளி பாலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.