ராசிபுரம் அருகே 21-ம் ஆண்டாக 33அடி ஸ்ரீசண்டி கருப்பசாமி கோயிலில் பிடிகாசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் அடுத்துள்ள அரியாகவுண்டம்பட்டி கொங்கலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள 33 அடி ஸ்ரீ சண்டிகருப்பசாமி கோயில், ஸ்ரீ நாககன்னி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிடிகாசு வழங்குவது வழக்கம். பக்தர்கள் கோவில் பூசாரியிடம் பிடிகாசு வாங்கினால் செல்வம் பெருகும், செய்யும் தொழில் மேன்மை அடையும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தில் 21ம் ஆண்டாக ஆடி அமாவாசை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் விழா நடைபெற்றது.


இந்த பிடிக்காசு வாங்கும் நிகழ்ச்சியில் 108 மூலிகைகளை கொண்டு கணபதி ஹோமம், அஷ்டலக்ஷ்மி ஹோமம், நரசிம்ம ஹோமம் போன்ற ஹோமங்கள் திருவெள்ளறை ஸ்ரீரங்கம் தலைமை பட்டாச்சாரியார்கள் ரமேஷ், ஸ்ரீராம் பண்டரி, வினோத் பட்டர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களும், அண்டை மாவட்ட பக்தர்களும் பங்கேற்று வழிபட்டு பிடிகாசு பெற்றுச்சென்றனர்.
முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்

ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் பிரசத்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி மூலவர் மற்றும் உற்சவர் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி மூலவர் அம்மன், உற்சவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், மலர்கள் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சமயபுரத்தால் அலங்காரத்தில் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன்
இதே போல் ராசிபுரம் , ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை தொடர்ந்து சமயபுரம் அம்மன் அலங்காரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சமயபுரத்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி வழிபட்டனர்.
பழையபாளையம் அங்காளம்மன்

எருமைப்பட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏரிக்கரை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு விதமான அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் வளையல் மற்றும் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல் ராசிபுரம் அருகேயுள்ள அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி அமாவாசையை தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.