Saturday, August 30, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ஊழல் ஒழிப்பு பணியை முன்னாள் மாணவர் சங்கங்கள் ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் - தமிழ்நாடு...

ஊழல் ஒழிப்பு பணியை முன்னாள் மாணவர் சங்கங்கள் ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்

பழனியில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. முன்னாள் மாணவர்களின் சார்பாக பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் தலைமை ஆசிரியரும் முன்னாள் மாணவருமான வெ. மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதியுமான டாக்டர் வீ. ராமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது.

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி கடந்த நூறாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்கியுள்ளது. இங்கு படித்த பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் மத்திய, மாநில அரசில் பெரும் பதவிகளிலும் சிறந்த தொழில் முனைவோராகவும் வளர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களை உருவாக்கிய பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு நூற்றாண்டு விழாவை முன்னாள் மாணவர்கள் சார்பில் நடத்துவது அவசியமானதாகும். வரும் நவம்பர் மாதத்தில் நூற்றாண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் பழனி நகராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும் பொதுமக்களும் பழனி நகராட்சியின் நூற்றாண்டு விழாவிற்கு உதவ வேண்டுமென்று என்று ராமராஜ் கேட்டுக்கொண்டார்.

தமிழகம் முழுவதும் அரசு நடத்தும் தொடக்க பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் சங்கங்களை மக்கள் தானாக முன்வந்து ஒரு இயக்கமாக நடத்த வேண்டும். பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் சிறப்பாக படிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு உதவிகள் செய்யவும் முன்னாள் மாணவர் சங்கங்கள் உதவிகரமாக இருக்க வேண்டும். பள்ளிகளில் நிர்வாக சீர்கேடுகளையும் ஊழலையும் ஒழிக்கவும் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாக்கவும் ஒவ்வொரு பள்ளியிலும் முன்னாள் மாணவர்கள் சங்கங்களை அமைப்பது அவசியமானதாகும் என்று ராமராஜ் கருத்து தெரிவித்தார்.

பள்ளிகளில் மேலாண்மை குழுக்களை அமைக்கவும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை அமைக்கவும் உரிய அரசாணைகள் நடைமுறையில் உள்ளன. குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கிராம ஊராட்சி அளவிலும் ஊராட்சி ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் குழந்தை பாதுகாப்பு குழுக்களை அமைக்கவும் பேரூராட்சி அளவிலும் நகராட்சி அளவிலும் மாநகராட்சி வார்டு அளவிலும் குழந்தை பாதுகாப்பு குழுக்களை அமைக்கவும் தமிழக அரசு அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆறு வகையான பகுதிகளிலும் குழந்தைகள் சபைகளை நடத்தவும் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைகளை போல, ஒவ்வொரு பள்ளிகளும் முன்னாள் மாணவர் சங்கங்களை அமைக்க தகுந்த வழிகாட்டுதல் அரசாணைகளை வெளியிடுவது சிறந்த பயனை தரும் என்று ராமராஜ் பேசினார்.

பள்ளி மேலாண்மை குழுக்களையும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களையும் முன்னாள் மாணவர்கள் சங்கங்களையும் மாவட்ட, ஒன்றிய, கிராம ஊராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களையும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களையும் அமைக்கவும் வழிநடத்தவும் ஒரு சட்டம் இயற்றப்பட்டால் குழந்தைகளின் பாதுகாப்புக்கும் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று ராமராஜ் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விழா மலர் அமைப்பு பற்றிய விளக்கத்தை சந்திரசேகர ஹரிஹர சுவாமிநாதன் எடுத்துரைத்தார். விழாவில் முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், ஆசிரியர் நந்திவர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பி.சிவனேசன் வரவேற்றுப் பேசினார். இறுதியில் பழனி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அழகிரி சாமி நன்றி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!