தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ., வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
அரசு பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பு பாடங்களில் கடந்த 2012-ம் ஆண்டு ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள். பின்னர் 2014-ம் ஆண்டு சம்பள உயர்வு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து 2017-ம் ஆண்டு சம்பள உயர்வு 700 ரூபாய் வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு சம்பள உயர்வு 2 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்பட்டது. கடைசியாக 2024-ம் ஆண்டு 2500 ரூபாய் உயர்த்தியதால் 12,500 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, மரணம் அடைந்த குடும்பத்திற்கு நிவாரணம் எதுவுமே கிடையாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 2025-ம் ஆண்டு கணக்குப்படி சுமார் 12 ஆயிரம் பேர் பணி செய்து வருகிறார்கள். மாண்புமிகு முதல்வர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதி அளித்திருந்தார். இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாதது பகுதிநேர ஆசிரியர்களின் மத்தியில் ஒரு குறையாக இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள், விதவை, 50 சதவீதம் பெண்கள் மற்றும் ஏழை அடித்தட்டு விளிம்பு நிலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகிறார்கள். எனவே தமிழ்நாடு அரசின் சலுகைகள் கிடைக்க காலமுறை சம்பளத்தில் பணிநிரந்தரம் செய்ய அரசு கருணையோடு பரிசீலிக்க வேண்டும்.
நடப்பாண்டு பட்ஜெட்டின் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின் போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்ததை நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்துள்ளார்கள். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.