ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் 2025-26-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சரவண மஹால் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக இ.என்.சுரேந்திரன், செயலாளராக ஏ.மஸ்தான், பொருளாளர் ஏ.ஜி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பிற நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.முன்னதாக விழாவில் சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் எம்.முருகானந்தம் வரவேற்றுப் பேசினார். மண்டல 5-இன் உதவி ஆளுநர் எஸ்.அன்பழகன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து, வாழ்த்துரை வழங்கிப் பேசினார்.

ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநரும், மாவட்ட ரோட்டரி ஆலோசகருமான கே.சுந்தரலிங்கம் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று சேவை திட்டங்கள் வழங்கிப் பேசினார். விழாவில் ஏற்புரையாற்றிப் பேசிய சங்கத்தின் புதிய தலைவர் இ.ஆர்.சுரேந்திரன், பேசுகையில் ரோட்டரி சங்கம் என்பது சர்வதேச அளவில் போலியோ ஒழிப்பில் பங்காற்றியுள்ளது. இது ஒரு முழுமையான சேவையாற்றும் சங்கம் என்பதை அனைவரும் உணரவேண்டும். அதே போல் விபத்துக்களை குறைத்து சமுதாயத்தில் உயிர்களை பாதுகாக்கும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் முழுமூச்சாக ஈடுபட நிர்வாகிகள் உறுதியெடுத்துள்ளோம். இதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

விழாவில் ராசிபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான யுபிஎஸ்., ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஸ்ட்ரெச்சர் மற்றும் வீல் சேர், ரூ.20 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகை 3 நபர்களுக்கு, ஏழைப் பெண்கள் இருவருக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரம், ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஆத்ம பூமி ஊழியர்களுக்கு சீருடை, அரியாகவுண்டம்பட்டி சாரோன் முதியோர் இல்லத்திற்கு கடந்த 24- 25 ஆண்டு குழுவினரால் அமைக்கப்பட்ட மேல்கூறையின் கீழ் சிமெண்ட் பேவர் பிளாக் தரை தளம் அமைக்க ரூ.70 ஆயிரம், கல்வி வளர்ச்சி செயலி உருவாக்கும் பட்டதாரி ஆசிரியர் சந்திரேசகர் என்பவருக்கு, கே.எஸ்.கருணகர பன்னீர்செல்வம் ஏற்பாட்டில், என்ட் போலியோ சேர்மேன் சுதாகர் ரூ.80 ஆயிரம் மதிப்பில் வழங்கிய லேப்டாப் போன்றவை வழங்கப்பட்டன. விழாவில் மொத்தம் ரூ.2.46 லட்சம் மதிப்பிலான சேவை திட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் சங்கத்தின் என்டோவ்மெண்ட் டோனர்கள் கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சத்தியமூர்த்தி ரோட்டரி மற்றும் இன்னர்வீல் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.