ராசிபுரம் கிளைச்சிறைச்சாலை வியாழக்கிழமை மூடப்பட்டு கைதுகள் வேறு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதன் மூலம் கடந்த 125 ஆண்டு காலத்திற்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த கிளைச்சிறையின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தது.
மாநிலம் முழுவதும் பாதுகாப்பு இன்றியும், போதிய வசதிகள் இன்றியும் குறைவான கைதிகளுடன் செயல்பட்டு வரும் சிறைச்சாலைகளை மூடவேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு முடிவு செய்து குழு அமைத்து ஆய்வு செய்தது. இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் மட்டும் வசதிகளற்ற 18 சிறைகளை மூட சிறைத்துறை முடிவு செய்தது. இதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செயல்படும் கிளைச்சிறையும் ஒன்று. 1898-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் இந்த கிளைச்சாலை செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் வருவாய்த்துறையின் கீழ் செயல்பட்டு வந்த இந்த கிளைச்சிறைச்சாலை 1983-ம் ஆண்டு முதல் சிறைத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் தற்போதைய கரூவூலம் அருகில் செயல்பட்டு வரும் இந்த கிளைச்சிறையின் பணிகள் முடிவுக்கு வந்தன. ராசிபுரம் கிளைச்சிறை 6 அறைகளுடன் (செல்கள்) 34 கைதிகள் தங்கும் வகையில் இட வசதி கொண்டது. இங்கு சிறு குற்றங்கள் புரிந்த விசாரணை கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டு வந்தனர். கிளைச்சிறை கண்காணிப்பாளர் ஒருவரின் கீழ் 13 காவலர்கள் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கிளைச்சிறை மூடப்பட்டு மாவட்ட சிறைச்சாலையுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் 125 ஆண்டுகால சிறை செயல்பாடுகள் முடிவுக்கு வந்தன. இங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 விசாரணை கைதுகள் நாமக்கல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.