நாமக்கல் மாவட்டம் காவல்துறை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் மினி மாரத்தான் ஒட்டம் போன்றவை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், காவல்துறை ஆகியன இணைந்து சர்வதேச போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. ராசிபுரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற இந்த பேரணியை ராசிபுரம் டிஎஸ்பி., எம்.விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம், தலைவர் (தேர்வு) இ.என்.சுரேந்திரன், ராசிபுரம் பள்ளியின் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி, இன்னர்வீல் சங்கத் தலைவர் சுதாமனோகரன், செயலர் சிவலீலஜோதி, டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் வரை சென்றடைந்தது.

இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் போதை பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய தட்டிகள் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். பேரணியில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் சுரேஷ், ரோட்டரி நிர்வாகிகள் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், ராமசாமி, மஸ்தான், சிட்டிவரதராஜன், நடராஜன், பி.கே.ராஜா, வெங்கடாஜலம், பி.கண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

மின்மாரத்தான் ஒட்டம்:
இதே போல் நாமக்கல் அருகே உள்ள புதுச்சத்திரம் காவல் நிலையம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் ஏ.கே.சமுத்திரம் பகுதியில் இருந்து ஆத்தூர்-திருச்செங்கோடு பிரதான சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தது. இதற்கு, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமை தாங்கி மாரத்தான் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு போதை பொருள் விழிப்புணர்வு குறித்து கோஷங்களை எழுப்பியபடியே ஓடினர். முடிவில் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை புதுச்சத்திரம் காவல் துறையினர் செய்திருந்தனர்.