தமிழில் பெயர் பலகை – மாநகராட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்!
தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நடைமுறை சிக்கல் மற்றும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கால போதிய அவகாசம் வழங்கியிருந்தது. தற்போது வருகிற மே 15ம் தேதிக்குள் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுக்க வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் முத்து முன்னிலையில் தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் நாமக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், வருகிற மே 15ம் தேதிக்குள் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தவறும்பட்சத்தில் வணிக நிறுவனங்களுக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும். நடைமுறை சிக்கல் மற்றும் வணிகர்களின் சிரமம் உணர்ந்து தமிழில் பெயர் பலகை அமைப்பதில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. எனவே வணிக நிறுவன உரிமையாளர்கள் தங்களது நிறுவன பெயர் பலகைகளை தமிழில் அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்றார். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி நகர திட்ட அலுவலர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், பல்வேறு வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.