சென்னையில் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் கேம்ப் ரோட்டில் உள்ள அகண்ட பரிபூரண சச்சிதானந்த சத்குரு சபையில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு மாநில தலைமைச் சபையின் தலைவர் திருஞானம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஏற்புரை ஆற்றிய தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் பேசியதாவது.
திருமூலர் கூறிய சிவசித்தரின் இயல்புகளை பெற்றிருந்த சத்குரு சச்சிதானந்தம் அவர்களால் ஒன்றே கடவுள், உணர்வே பிரம்மம் என்பது உள்ளிட்ட ஆன்மீக தத்துவங்கள் போதிக்கப்பட்டது. அவரது ஆன்மீக கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பசி இல்லாதவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று சத்குருவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையிலும் கடந்த 1938 ஆம் ஆண்டு பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை தொடங்கப்பட்டது.

1945- ஆம் ஆண்டு சென்னை மாகாண ஆளுநரின் கேம்ப் கிளார்க் தனகோபால் அவர்களுடன், சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அரசினர் மாளிகையில் சத்குரு சச்சிதானந்தம் தங்கியிருந்தார். கவர்னர் பொறுப்பில் இருந்த ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, சுவாமிகளின் மகிமையை உணர்ந்து அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான், தமது உடலிலிருந்து ஆன்மாவை விலக்கிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக அறிவித்தார். அதன்படி 1946- ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 19-ம் நாள் மாலை ஐந்தரை மணிக்கு சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்.

அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள் நல்லடக்கம் அப்போதைய மாகாண ஆளுநரால் வழங்கப்பட்ட தாம்பரத்திற்கு அருகாமையில் வேளச்சேரி சிலை செல்லும் சாலையில் கேம்ப் ரோட்டில் உள்ள இடத்தில் நடைபெற்றது. தற்போது சத்குருவின் நல்லடக்கம் நடைபெற்ற, ஜீவசமாதி உள்ள இடத்தில் தலைமை சபையும் சத்குருவின் ஆன்மீகப் பாதையை ஏற்றுக் கொண்ட அன்பர்களால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளை சபைகளும் செயல்பட்டு வருகின்றன.
மனநிறைவு அடைவதற்காக சத்குரு சச்சிதானந்தத்தின் ஆன்மீக கொள்கைகள் உட்பட எல்லா ஆன்மீக மார்க்கங்களையும் நோக்கி மக்கள் பயணிக்கிறார்கள். அனைத்து ஆன்மீக பாதைகளும் மனிதனின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆசையை அங்கீகரிக்கின்றன. அதே சமயத்தில் மனிதன் பேராசை கொள்ளக் கூடாது என்று போதிக்கின்றன. மனிதனுக்கு ஏற்படும் பேராசையே தீய வழிகளில் பணத்தை தேட தூண்டுகிறது. இதன் காரணமாக லஞ்ச லாவண்யமும் ஊழலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதும் நடைபெறுகிறது. ஆன்மீகம் கூறும் பேராசைபடாதே என்பதற்கான பொருள் என்னவெனில் லஞ்சம் வாங்காதே! ஊழல் செய்யாதே! வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்காதே! என்பதாகும் என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்.
தனிநபர் அல்லது தனியார் அறக்கட்டளைகள் நடத்தும் ஆன்மீக மையங்களுக்கு செல்லும் போது அந்த இடங்களில் கூறப்படும் தல வரலாறு உண்மையா? என்பதையும் அத்தகைய இடங்களில் உள்ள சாமியார் என கூறப்படுபவர் அல்லது அங்கு சாமியார் ஒருவர் இருந்ததாக கூறப்படுவது குறித்த சங்கதிகள் உண்மையா? என்பதையும் அத்தகைய மையங்களில் நடத்தப்படும் பயிற்சிகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றால் ஏற்படுவதாக கூறப்படும் பலன்கள் அறிவியல் பூர்வமாக சரியானதா? என்பதையும் ஆன்மீக பாதையை நோக்கிச் செல்லும் அன்பர்கள் யோசிக்க வேண்டும் என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்.
நாம் வாழும் சமுதாயத்தையும் மக்களின் எதிர்காலத்தையும் தேசத்தையும் அளிக்கும் ஆயுதமாக லஞ்சமும் ஊழலும் திகழ்கிறது. அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாட்டில் லோக் ஆயுக்த அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. புகார் அளிப்பது குறித்த விவரங்கள் தமிழ்நாடு அயுக்தா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பொன்ராம் ராஜா, எல்ஐசி வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன், தொழிலதிபர்கள் தமிழரசன், சரவணன், ராஜகோபால் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் ஏராளமான பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்களும் சச்சிதானந்த சபையின் சத்குரு சச்சிதானந்த சபையின் அன்பர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியாக சித்திரை திருநாள் சிறப்பு குருபூஜையும் அன்னதானமும் நடைபெற்றது.