நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று ஒடிய விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை காலை சுமார் 20 பயணிகளுடன் அரசு எல்எஸ்எஸ்., நகரப் பேருந்து சேலம் நோக்கி புறப்பட்டு சென்றது. இப்பேருந்து ராசிபுரம் அடுத்த வைர ஆஞ்சநேயர் கோவில் எதிரே சென்றபோது திடீரென நிலை தடுமாறியவாறு சென்றது.

இதனை அறிந்த ஒட்டுநர் பாலசுந்தரம் சுதாரித்து பேருந்தினை நிறுத்திவதற்குள்ளாக இடதுபுற முன்சக்கரம் கழன்று ஒடி சாலையோரம் உள்ள கால்வாயில் விழுந்தது. இதனால் நிலை தடுமாறி இடது புறம் சாய்ந்த பேருந்தினை ஒட்டுனர் சுதாரித்துவாறு நிறுத்தினார். இதில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

இந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் தான் ராசிபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என பேருந்தின் ஒட்டுனர் எண்ணியிருந்த நிலையில் இந்த விபத்து நடந்ததாக பேருந்தின் ஒட்டுநர் தெரிவித்தார். மேலும் இதில் பயணித்த பயணிகள் அனைவரும் அவ்வழியே சென்ற வேறு அரசு நகரப் பேருந்தில் பாதுகாப்புடன் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இப்பேருந்து சம்பவ இடத்தில் சீரமக்கப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பேருந்து விபத்து ஏற்படும் அளவிற்கு அஜாக்கிரதையாக செயல்பட்டதாக ராசிபுரம் கிளை மேலாளர், உள்ளிட்ட வாகன மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப பணியாளர் என 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் உத்தரவித்துள்ளார்.