ராசிபுரம் அருகே வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் ஆட்டோ மோதி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மேலும் ஒரு ஆசிரியரும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் விலங்கியல் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தனசேகரன் (50). இவர் தனது ஊரான புதன்சந்தை செல்லப்பம்பட்டி பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இதே போல் இவருடன் அதே பள்ளியில் பணியாற்றும் சசிக்குமார் (51) என்ற ஆசிரியரும் மற்றொரு ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றுள்ளார். இருவரும் வெண்ணந்தூர் அருகேயுள்ள பழந்தின்னிப்பட்டி பகுதியில் சென்றபோது எடப்பாடி பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்த பாரம் ஏற்றும் ஆட்டோ நிலை தடுமாறிய நிலையில் இவர்கள் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர் தனசேகரன் முதலுதவி சிகிச்சைக்காக ராசிபுரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு ஆசிரியரான சசிக்குமார் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இவரும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் சக ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெண்ணந்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.