நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1978 -1980 -ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக்கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சிலர் பள்ளி பருவத்தில் தமிழ் பாடம் சொல்லி தந்த 99 வயதான ஆசிரியரை நேரில் சந்தித்து மரியாதை செய்து ஆசி பெறறனர். தமிழக ஆளுநர் மாளிகையில் அண்மையில் நடைபெற்ற கம்ப சித்திர விழாவில் பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விருது வழங்கி கெளரவித்தார். கம்பர் குறித்தும், ராமாயணம் குறித்து நூல்கள், கவிதைகள் எழுதிய எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள்,புலவர்கள் என பலருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதனையடுத்து ராசிபுரம் தமிழ் புலவர் மு.ரா. என்கிற மு.இராமசாமியையும் ஆளுநர் விருது வழங்கி கெளரவித்தார். இதனை தொடர்ந்து ஆசிரியரை நேரில் சந்தித்து முன்னாள் மாணவர்கள் சிலர் ஆசி பெற்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். பின்னர் ஆசிரியர் மு.ரா. 99 ஆம் அகவையில் தாம் எழுதிய புத்தகத்தை முன்னாள் மாணவர்களுக்கு வழங்கினார். ஒய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.வி.உதயகுமார் தலைமையில் வெங்கேடன், மு.ராஜேந்திரன், செந்தில்முருகன் உள்ளிட்டோர் ஆசிரியரை நேரி்ல் சந்தித்து ஆசி பெற்றனர்.