ராசிபுரம் ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளியின் 17-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முன்னதாக ஆண்டு விழாவில் பள்ளியின் பொருளாளர் எஸ்.மாதேஸ்வரி குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் டி.வித்யாசாகர் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

திருப்பதி திருமலா ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தின் தர்மாதிகாரியும், இஆர்பி., ஐடி சொல்யூசன்ஸ் முதன்மை செயல் அலுவலர் கே.சந்திரசேகர் சாஸ்திரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். விழாவில் அவர் பேசியது: இன்றைய மாணவர்கள் கல்வி கற்பதில் சிறந்தவர்களாக உள்ளனர். எனவே ஆசிரிசியர்கள் பணி என்பது தற்போது மாணவ மாணவியர்களை நல் வழிப்படுத்தும் நல்ல ஊக்குவிப்பாளர்களாக இருப்பது அவசியமானது. பள்ளி நாட்களில் பெரும்பாலும் மாணவர்கள் பெற்றோரை விட ஆசிரியர்களுடன் தான் தங்களை நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் கல்லூரி வாழ்க்கையில் இது போன்ற நேரத்தை மாணவர்கள் செலவிடமாட்டார்கள். எனவே பள்ளி பருவத்திலேயே மாணவர்களை தனித்துவ ஆற்றலை வெளிக்கொண்டுவருவர்களாக ஆசிரியர்கள் இருப்பது அவசியம். இது அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும். மாணவர்கள் சிலர் அரசியல் தலைவர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் வருவதற்கு அது போன்ற நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களே காரணம். எனவே மாணவர்களை பள்ளி பருவத்திலேயே சிறந்தவர்களாக உருவாக்கினால் அவர்களது எதிர்காலம் சிறந்ததாக இருக்கும் என்பதை சிந்தித்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

மேலும் ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுவதால், தற்போது நிலநடுக்கத்தை தாக்கும் வகையிலான கட்டிடங்களை கட்டும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். இது போன்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டறியும் வகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் ஒழுக்கும், அர்பணிப்பு, ஆன்மீகம் போன்றவற்றை பின்பற்றுவது அவசியம் என்றார்.
விழாவில் தலைமை வகித்த பள்ளியின் தாளாளர் பேசியது: இப்பள்ளி கடந்த 17 வருடங்களில் நூற்றுக்கணக்கான மருத்துவர்களையும், ஐஐடி, என்ஐடி போன்ற கல்லூரிகளில் பயின்று தற்போது சிறப்பான தலைமை இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி மாணவ மாணவியர்களிடம் ஒழுக்கத்திற்கு முதலிடமும் பன்முகத்திறன் வளர்க்கும் வகையிலும் கல்வி கற்பித்தலை கடைபிடித்து வருகிறோம். இது மாணவர்களின் எதிர்காலத்தில் பெரும் பங்காற்றுவதாக இருக்கும் என்றார்.
பின்னர் சிறப்பு விருந்தினர் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான பரிசுகளை வழங்கினார். முன்னதாக பள்ளியின் முதன்மை நிர்வாக இயக்குனர் எஸ்.பிரனேஷ் பள்ளி செயல்பாடுகள், எதிர்கால கல்வித்திட்டங்கள், பள்ளியில் வரும் கல்வி ஆண்டில் இருந்து ராசி ஸ்போர்ட்ஸ் அகாடமி துவங்கி விளையாட்டு துறையில் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறித்தும் விளக்கி பேசினார்.
விழாவில் 2024 -25 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவ மாணவியரும் பெற்றோர்களும் ஒத்துழைக்க வலியுறுத்தினார். தொடர்ந்து மாணவ மாணவியரின் பல்வேறு கலாச்சார, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பள்ளி ஆசிரியை காயத்ரி நன்றி கூறினார்.