தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதன் மூலம் திமுக ஆட்சி நிர்வாகத்தை முடக்கலாம் என மத்திய அரசு நினைத்தால் அது நிறைவேறாது என நாமக்கல் மாவட்டத் திமுக செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.4034 கோடி தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை எனக்கூறி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சரும், திமுகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஒன்றியத்திமுக செயலர் கே.பி.ஜெகந்நாதன் தலைமை வகித்தார். நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் முன்னிலை வகித்தார். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பங்கேற்று ஆர்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசியது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கடந்த 6 மாதமாக ரூ.4034 கோடி மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தரவில்லை. இந்த திட்டத்தில் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய பணமாகும். செய்த வேலைக்கு நியாயமாக வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும்.

வறட்சியின் காரணமாக தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்க கூடாது என்பதற்காக வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தவர் பிரதமராக இருந்த மன்மோகன் சிங். இந்தத் திட்டத்தை 20 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்த திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும், சுமார் 1 கோடி பேர் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்திற்கு நிதியை நிறுத்துவதால் அரசை முடக்கலாம் என மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் அது முடியாது. பயனாளிகளுக்கு இந்த நிதி கிடைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
தென்னிந்திய பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி:
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி உள்ளது. தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய இந்த பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒரிசா, மேற்குவங்கம் என பாஜக ஆட்சி இல்லாத பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களை எண்ணிக்கை குறைக்க முயற்சி செய்கிறார்கள். அதற்காகத்தான் தமிழ்நாடு முதல்வர் இந்திய மாநில முதல்வர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தை நடத்தியுள்ளார். 1971-ம் ஆண்டு தொகுதி நிலவரங்கள் எவ்வாறு இருந்ததோ அதனையே பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்கள். வட மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஆட்சி அமைத்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில்தான் தொகுதி மறு சீரமைப்பு கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.
தேர்தல் நேர வாக்குறுதிகள் நிறைவேற்றம்:
தமிழ்நாடு முதல்வர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றியுள்ளார். மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமை பெண்கள் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி,காலை உணவு திட்டம் , கலைஞர் கனவு இல்லத்தில் திட்டத்தில் 3.50 லட்சம் போன்றவற்றை கொண்டு வந்து இந்தியாவிலேயே முன்மாதிரியாக செயல்படுத்தி வருகிறார். கலைஞர் கனவு இல்லத்தில் மட்டும் 6000 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் ராசிபுரம் தொகுதி மக்களுக்கு ரூ.854 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசு தமிழகத்தை பல்வேறு வழிகளில் வஞ்சித்து வந்தாலும், அக்கட்சியுடன் அதிமுக கூட்டு வைத்துள்ளது. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சியினர், பெண்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.