ராசிபுரம்: ரூ.854.37 கோடி மதிப்பிலான ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் – 98 சதவீதம் பணிகள் முடைந்துளளன – சோதனை ஓட்டம் ஏப்.1-ல் நடைபெறும்: ஆய்வுக்கு பின் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., செய்தியாளர்களுக்கு பேட்டி

ரூ.854.37 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ராசிபுரம் புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 98 சதம் முடிவடைந்துள்ள நிலையில், இதற்கான சோதனை ஒட்டம் ஏப்.1-ல் நடைபெறும் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் சந்திரசேகரபுரம் பகுதியில் உள்ள இத்திட்டத்திற்கான நீருந்து நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இதில் அவர் தெரிவித்ததாவது:
ராசிபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கிடும் வகையில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பாக எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் தடை ஏற்பட்டு காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் நாளடைவில் மக்கள் தொகை பெருக்கம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஒரு புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதும் அத்தியாவசியமாகிறது. குறிப்பாக, பொதுமக்களுக்கு சீரான தங்குதடையின்றி காவிரி குடிநீர் வழங்குவது என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதனடிப்படையில், கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இப்பகுதிக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இதனடிப்படையில், நிதிநிலை அறிக்கையில் ரூ.854.37 கோடிக்கு நிதி ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராசிபுரம் நகராட்சி, ராசிபுரம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, பிள்ளாநல்லூர், வெண்ணந்தூர், அத்தனூர், மல்லசமுத்திரம் ஆகிய 8 பேரூராட்சிகள் உள்ளிட்ட 523 கிராம குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுமார் 8 லட்சம் பேர் பயனடையும் வகையில் திட்டம் கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஏற்கனவே உள்ள திட்டத்தின் கீழ் 36 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் நிலையில், புதிய திட்டத்தின் கீழ் நாள்தோறும் 76.14 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படும். இதற்கான பணிகள் தற்போது 98 சதம் முடிவடைந்துள்ளன.
ஏப்.1-ல் சோதனை ஒட்டம்:
விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, வருகிற ஏப்.1 அன்று சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. சோதனை ஓட்டமானது ஆறு மாத காலத்திற்கு நடைபெறும். இக்காலத்தில் குடிநீர் திட்டப் பணியானது அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடை இன்றி விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும். சோதனை ஓட்ட காலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அவைகள் முற்றிலுமாக களையப்பட்டு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீர் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 1235 கி.மீ நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம், பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 547 கிராமங்களுக்கு வழங்கும் பகுதி இரண்டு திட்டத்தினையும் சேர்த்து, 156 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளும், 162 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் புதிதாக அமைக்கப்படுகின்றன.
8 லட்சம் பேர் பயனடைவர்
மேலும், சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நெடுங்குளம் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து நீர் ஏற்றம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து, காட்டுப்புதூர் அருகே முறையாக குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இக்குடிநீர் திட்ட பணிகள் நிறைவடையும் போது, ராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், வெண்ணந்தூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்து 523 குடியிருப்புகள், மல்லசமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு உட்பட்ட 547 குடியிருப்புகள் என மொத்தம் 1070 குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 76.14 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட வரும் குடிநீர் திட்டங்களில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும் என கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், அட்மா குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன், நிர்வாக பொறியாளர்கள்மோகன்தாஸ், ஜெயகோபு, செல்வராசு, உதவி நிர்வாக பொறியாளர் மஞ்சு, உதவி பொறியாளர் சங்கீதா, நகராட்சி ஆணையர் சு.கணேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.