சர்வதேச மகளிர் தின சிறப்பு தொகுப்பு
“எந்த துறையிலும் சாதித்து காட்ட பெண்மை என்பது தடையல்ல. பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் செய்ய வந்தோம் என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப தற்போது பெண்கள் பலதுறைகளிலும் சாதித்து வருகின்றனர். தகுதியும்,திறமையும் இருந்தால் சாதிப்பது பெண்களுக்கு சாத்தியம் என்பதை நிரூப்பித்துக்காட்டியுள்ளார் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியின் முதல் பெண் நகர்மன்றத் தலைவராக செயல்பட்டு வரும் முனைவர் ஆர்.கவிதா சங்கர்.

கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக இருந்த வந்த முனைவர் ஆர்.கவிதா சங்கர், உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீட்டில் பெண்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டதன் காரணமாக ராசிபுரம் முதல் பெண் நகர்மன்றத்தலைவராகி இருக்கையை அலங்கரித்து பணிகளை செய்துவருகிறார். கல்லூரி பேராசிரியராக இருந்து வந்த அவர், அரசியல் களத்தில் இறங்கி நகர்மன்றத் தலைவராக செயல்பட்டு வருவது குறித்து அவர் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் நான், எனது அண்ணன் இருவரையும் பெற்றோர் வளர்க்கும் போதே ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்ததால், அதற்கேற்றவாறு தவறுக்கு இடமின்றி செயல்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. தற்போதும் எனது குழந்தைகளுக்கும் அதனையே பிரதானமாக சொல்லி வளர்க்கிறேன். எம்காம்., முதுகலை பட்டம் முடித்த நான், எம்பில், மகளிர் சுய உதவிக்குழுவின் மைக்ரோ கிரிடிட் லோன் என்ற தலைப்பில் ஆய்வு செய்து பிஎச்டி., பட்டம் பெற்று 2005 முதல்2022 வரை தனியார் கல்லூரியிலும், கெளரவ விரிவுரையாளராக ராசிபுரம் அரசு கலைக்கல்லூரியிலும் பணியாற்றினேன். கல்லூரியில் படிக்கும் போது அத்லெட், கலைப்போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பது உண்டு. பள்ளி, கல்லூரிகளில் மாணவத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளேன். அதனாலோ என்னவோ தற்போது நான் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனக்கு தொழில் முனைவோராக வேண்டும் என்ற ஆர்வம் தான் இருந்தது. அரசியலில் விருப்பம் இல்லை என்றாலும் மாமனார், கணவர் அரசியலில் இருந்த காரணத்தினால் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ராசிபுரம் நகர்மன்றத்தின் முதல் நகர்மன்ற பெண் தலைவர் என்ற வாய்ப்பு கிடைத்தது. இதனை மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பாக கருதினாலும், ஆண்கள் நிறைந்த துறையை கையாள்வதில் பெண்களுக்கு இருக்கும் சிரமங்கள் உணரமுடிந்தது. எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருப்பதால், பல இடையூறைகளை தாண்டி மக்கள் பணியாற்றி வருகிறேன்.
அரசின் திட்டங்களால் மனநிறைவு
நகர மக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி, மின்விளக்கு, சாக்கடை, குடிநீர், கழிவுகள் அகற்றம் போன்றவற்றை கையாள்வதில் மனநிறைவு உள்ளது. மேலும் நகருக்கான தொலைநோக்குப் பார்வையில் அமைந்த புதிய கூட்டு குடிநீர் திட்டம், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம், நகர எல்லை விரிவாக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் போன்ற பெரும் பணிகள் அரசின் ஒத்துழைப்போடு செயல்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு விளையாட்டை ஊக்குவிக்க இதற்கேற்ற வகையில் நகரின் உடற் பயிற்சிக்கான மையங்கள் ஏற்படுத்தும் எண்ணம் உள்ளது. இதனை செயல்படுத்துவேன்.

பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற வேண்டும்
பெண்கள் குடும்பத்திலும், சமுதாயத்திலும் பொருளாதாரத்தில் சுயசார்புடனும், சுதந்திர தன்மையுடன் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் எதிலும் சாதிக்க முடியும். இதனால் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட திட்டமிட்டுள்ளேன். இது குறித்து பெண்களுக்கு உதவிகள் செய்யவும் தயாராக உள்ளேன். இன்று சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்கள் பலர் வர்த்தகத்தை விரிவுப்படுத்தி வருகின்றனர். இது நவீன தொழில்நுட்பத்தை பெண்கள் அறிந்து கொண்டு சமூக வலைதள சந்தைப்படுத்துதல் குறித்து அறிந்து கொள்வது அவசியம். இதன் மூலம் பல தொழில்கள் செய்து பொருளாதாரத்தில் ஆரோக்கியமானவர்களாக தங்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என்றார். எனவே பெண்கள் பொருளாதாரத்தில் கையாள்வதில் தனித்து நின்று சாதிக்க வேண்டும் என்றார்.