Saturday, April 5, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் மட்டுமல்ல தென் மாநிலங்கள் புறகணிக்கப்படும்: மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பேட்டி

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் மட்டுமல்ல தென் மாநிலங்கள் புறகணிக்கப்படும்: மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பேட்டி

மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்தை மட்டுமல்ல தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். ராசிபுரத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் தெரிவித்தாவது: 1967 முதல் அண்ணா தலைமையிலும், அதனையடுத்து ஐந்து முறை கருணாநிதி தலைமையிலும் சிறப்பான ஆட்சி நடந்துள்ளது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலும் நடைபெற்று வருகிறது . எப்போது திமுக ஆட்சியில் செய்கிறதோ அது பொற்காலம் ஆகும். கடந்த 50 ஆண்டுகளில் கல்வி, தொழில், தனிநபர் பொருளாதாரம், சமூக நீதி ஆகியவற்றில் தமிழகம் தமிழகம் அபரித வளர்ச்சி பெற்றுள்ளது. வளர்ச்சியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் உள்ளது. எந்த சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதோ அந்த சமூகத்துக்கு அதனை வழங்கி உயர்த்திவிட்டது திமுக ஆட்சியில் தான். கொங்குவேளார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தொழில், கல்வி அவர்களை உயர்த்தியது கருணாநிதி ஆட்சியில் தான். அதே போல் அருந்ததியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்து உயர்த்திவிட்டது திமுக ஆட்சி தான். எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இலவச மின்சாரம், ஏழைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வகையில் பொது காப்பீடு கொண்டு வந்தது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தான். இதனை தான் தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. சென்னையில் ஐடி பார்க் கொண்டு வந்து சர்வதேச நிறுவனங்களை ஈர்த்தது திமுக ஆட்சி தான். இப்படி பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து தமிழக வளர்ச்சிக்கு வித்திட்டது திமுக ஆட்சியில் தான்.

தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமல் சட்டத்தை மாற்றியமைக்க முடியும்:

தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சித்தாந்தத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்தியா என்பது பல மொழிகள், பல கலாச்சாரம் கொண்ட மக்கள் வசிக்கும் நாடு. திமுக தத்துவமே கூட்டாட்சி என்பது தான். மொழியால் வேறுபாடுகள் இருந்தாலும், மாநிலத்துக்கு மொழி என்பது அவசியம். ஆனால் தற்போது மத்திய அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியாவில் உள்ள பிற மாநிலத்துக்கு துரோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 1971-ம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையிலேயே மறுசீரமைப்பு இருக்க வேண்டும். 1971-ல் மக்கள் தொகை அதிகரிப்பால் வேலைவாய்ப்பு உருவாக்க முடியவில்லை என்பதால் மத்திய அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடிவு செய்த போது, இதனை தமிழகம் தீவிரமாக செயல்படுத்தியது. தற்போது மக்கள் தொகை அடிப்படையில் சீரமைப்பு என்பது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது 2026-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பு வரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய அரசு தள்ளிவைக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் நாட்டில் 848 மக்களவை தொகுதிகள் உருவாக்கப்படும். இவை பெரும்பாலும் வடமாநிலத்துக்கு சாதகமாகவும், தென் மாநிலங்களுக்கு பாதகமாகவும் உருவாகும்.

வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும். உதாரணமாக 80 தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசத்தில் 144 தொகுதியாகும். 40 தொகுதியாக உள்ள பிகாரில் 79 ஆக உயரும். 29 தொகுதிகள் கொண்ட மத்தியபிரதேசத்தில் 52 தொகுதியாக உருவாகும். மாறாக 39 தொகுதிகள் கொண்ட தமிழகம் 31 தொகுதிகளாக குறைக்கப்பட்டு நம் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும். இதே போல் கர்நாடாகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களின் தொகுதிகள் குறைக்கப்படும். இதனால் தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே வடமாநில பிரதிநிதிகள் ஆதரவுடன் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைக்க நிலை உருவாகும். கல்வி, வேலைவாய்ப்பில் உரிமைகள் மறுக்கப்படும். தற்போது கல்வி நிதி, இயற்கை பேரிடர் நிதி வழங்க மறுக்கின்றது. இந்தியை கட்டாயம் பேசவேண்டும் என்கிறது. தொழி்ல் வளர்ச்சியின் காரணமாக தமிழகத்தின் வரி பங்களிப்பு பிற மாநிலங்களை விட அதிகம் உள்ளது. ஆனால் நமக்கு உரிய நிதி தரமறுக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இதன் மூலம் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கும், தொகுதி மறுசீரமைப்பிற்கு தமிழகம் முதல் குரல் கொடுத்துள்ளது. மாநில மக்கள் உரி்மைகள் பாதுகாக்க மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறை இருக்கக்கூடாது என்பது திமுக நிலைபாடு என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!