ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால், நாமக்கல் மாவட்டக் கோழிப் பண்ணைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், கோழிப்பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 45 அதிவிரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு, 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் அதிகமுள்ள நாமக்கல் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா கோழிப்பண்ணையாளர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது, ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில், பண்ணையாளர்கள் வழக்கமாக மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கால்நடை பராமரிப்பு, பொது மருத்துவம், உணவு பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி, வனம் உள்ளிட்ட அரசு துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச. உமா ஆய்வு கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இதுகுறித்து விவரங்களை கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் 7 கோடி முட்டையினக் கோழிகள், வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் வளர்க்கப்பட வேண்டும். தினந்தோறும் 5 கோடிக்கும் மேற்பட்ட முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதால், கோழிகளின் ஆரோக்கியம் மற்றும் இறப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கோழிகளுக்கு கிருமி நாசினி தெளித்தல், உயிரி பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
கோழிப் பண்ணைகளின் நுழைவாயிலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு, வெளி ஆட்களும் வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும், வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமி நாசினை செலுத்த பின்னரே கோழிப் பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும்.
நாமக்கல் மண்டலத்தில் நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்பட்டு வரும் உயிரி பாதுகாப்பு நடைமுறைகளால் இங்கு பறவை காய்ச்சல் கிருமிகள் பரவ வாய்ப்பு இல்லை என்றபோதிலும் கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், கோழிகள் திடீர் இறப்பு காணப்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், இறந்த கோழிகளை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 105 கால்நடை மருந்தகங்கள் மூலம், அந்தந்த பகுதிகளில் 45 நடமாடும் அதிவிரைவுக் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் ஒரு குழுவிற்கு ஓர் கால்நடை மருத்துவர், ஓர் கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் மாவட்டத்தில் தத்தம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு நேரில் சென்று, கோழிகளில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா?, இறப்புகள் உள்ளதா?, கோழிகளை அப்புறப்படுத்த முறையாக குழி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? ஆகியவற்றை ஆய்வு செய்வார்கள்.
எனவே கோழிப் பண்ணையாளர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோழிகளில் அதிகமான இறப்புகள் இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் நாமக்கல் மண்டல இணை இயக்குநர் வி.பழனிவேல், உதவி இயக்குநர் அருண் பாண்டியன், கோழியினை நோய் ஆய்வக உதவி இயக்குநர் சுமதி, கோழிப் பண்ணையாளர்கள், அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.