ராசிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ராசிபுரம் அருகேயுள்ள கோனேரிப்பட்டி ஏரியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி.,எம்.விஜயகுமார் உத்தரவின் பேரில் அப்பகுதியிக்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் சுமார் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து விற்பனையில் ஈடுபட்ட கட்டாச்சம்பட்டி பகுதியை சேர்ந்த தேவதாஸ் மகன் சோப்ராஜ் (31) என்பவர் கைது செய்யப்பட்டார். இவருடன் இருந்த அவரது தம்பி விக்ரம் தப்பியோடினார். அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, ரொக்கம் ரூ. 20800-ம், இரு சக்கர வாகனங்கள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சோப்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தப்பியோடிய விக்ரம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.