ராசிபுரம் ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோவிலின் மாசி மகாசிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலின் மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் அர்ச்சகர்கள் சிவஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ ஸ்ரீ மது சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்று விழா நடைபெற்றது. தொடர்ந்து சிவன் கோவிலிருந்து நடராஜர், கோவிலிக்கு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மேள தாளங்கள் முழங்க அழைத்துவரப்பட்டார். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா அழைத்துவரப்பட்டார்.

மார்ச் 3-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் பல்வேறு கட்டளைதாரர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாள்தோறும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவிதி உலா அழைத்து வரப்படுவார்.

பிப்ரவரி 26 ஆம் தேதி அம்மன் சக்தி அழைத்தல், அக்னிகுண்டம் பற்றவைத்தல், சுவாமி ஊஞ்சலாடுதல், பந்த பலியிடுதல், பூ மாலை உள்ளிட்ட நிகழ்வுகளும், பிப். 27 காலை தீ மிதித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து பிப். 28 ஆம் தேதி சுவாமி ரத ஊர்வலம் நடத்தப்படுகிறது. முக்கிய நிகழ்வான மயான கொள்ளை பூஜை மார்ச் 1ஆம் தேதி நடைபெறும். மார்ச் 2-ல் சத்தாபரணம் மார்ச் 3-ல் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் ஏ.மாதேஸ்வரன், ஏ.விஸ்வநாதன், எஸ்.சுப்பிரமணியம், எஸ்.பிரபு உள்ளிட்ட பூசாரிகள் செய்துள்ளனர்.