குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை சார்பில், இளம் தலைமுறைக்கான தொழில் வாய்ப்புகள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் சரவணா தேவி வரவேற்றார்.
இதில் பேசிய அவர், இளைய சமுதாயத்தினர் சிறந்த தொழில் முனைவோர்களாக மாற, தொழில் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அவற்றை நல்லமுறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக தர்மபுரி, அரசு கலைக்கல்லூரி, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் வேலவன், திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பேராசிரியர் ஹரிதாஸ் பங்கேற்று பேசுகையில், உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியா வெகு விரைவில் வர இருக்கிறது. மேலும் புதிய தொழில் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. விளையாட்டு பொம்மைகள் தொடங்கி பல தொழில்களில் முன்னேற மாணாக்கர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிறிய அளவில் தொழில் துவங்குங்கள். அதற்கு மூலதனம் பயம், போட்டி, அனுபவமின்மை, ஆகியவைகள் பிரச்சனைகளாக இருந்தாலும் எளிதில் அவற்றைக் கடந்து மீண்டு வர முடியும். ஆன் லைன் பிசினஸ் மற்றும் சிறுதொழில் செய்யும் தொழில்நுட்ப ஆற்றல் கற்கவேண்டும் என்றனர். இதில் பேராசிரியர்கள் ரகுபதி, காயத்ரி, அன்புமணி உள்பட பலர் பங்கேற்றனர்.