Wednesday, March 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பெண்கள் நம்பும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான்: கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி.,

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பெண்கள் நம்பும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான்: கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி.,

தமிழகத்தில் பெண்களுக்கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தியுள்ளதன் மூலம் ஜெயலலிதாவிற்கு பிறகு பெண்கள் நம்பும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., குறிப்பிட்டார். நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் நகர திமுக சார்பில் பஸ் நிலையம் முன்பாக மத்திய அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் தலைமை வகித்தார். 9-வது வார்டு செயலர் சி.பிரபாகரன் வரவேற்றார். இதில் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பங்கேற்றுப் பேசினார். இதில் அவர் பேசியது: நாட்டின் நிதி நிலை அறிக்கை மத்திய நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகம் புறகணிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டித்து தான் இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. நிதி நிலை தாக்கல் செய்தவுடன், நாட்டின் பொருளாதார நிலை என்ன என்ற அறிக்கையையும் பாராளுமன்றத்தில் முன் வைத்தனர். அதில் தமிழ்நாட்டை பாராட்டியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தமிழகம் அனைத்து துறையிலும் பொருளாதார குறியீடு 5.4 லிருந்து 3.21 ஆக உயர்ந்துள்ளது என பாராட்டியுள்ளனர்.

ஒட்டு மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு ஏறத்தாழ 9 சதம் என பாராட்டுகின்றனர். இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களில் தமிழகம் பொருளாதாரத்தில் 2-வது மாநிலம் என்றும், சுகாதாரம், தொழில், உயர்கல்வி ஆகியவற்றில் முன்னனியில் இருக்கிறது என்றும் வெளி மாநிலத்தில் இருந்து கிசிச்சைக்காக தமிழகத்திற்கு 4 ஆண்டில் 15 லட்சம் பேர் வந்துள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது. இத்தனை இருந்தும் நிதி நிலையில் எந்த நிதியும் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி கேட்டோம். கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி கேட்டோம், கோவை விமான நிலையம் விரிவாக்க பணிக்கு நிதி கேட்டோம். சென்னை பெஞ்சாம் புயலுக்கு நிதி கேட்டோம் எதற்கும் பதிலில்லை. மத்திய அரசின் இந்த பட்ஜெட் பிகார் மாநிலத்துக்கான பட்ஜெட். பிற மாநிலத்துக்கு நிதி இல்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடாக மாநிலத்துக்கும் கூட நிதி ஒதுக்கீடு இல்லை. தமிழகத்தின் மொத்த வருவாயில் தமிழகத்தின் பங்காக ஒரு ரூபாய்க்கு 29 பைசா தான் மத்திய அரசு திருப்பி தருகிறது. ஆனால், உத்தரபிரதேசத்துக்கு 1 ரூபாய் வரி கட்டினால் அவர்களுக்கு ரூ.2 ரூபாய் தருகிறார்கள், இது நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு முன்பே வாழ்த்து சொன்னார் பிரமதர் மோடி. இன்று விசா இல்லை எனக்கூறி இந்தியர்கள் பலரை கால், கைகளை கட்டிவைத்து நாட்டிற்கு திருப்பியனுப்பியுள்ளார். இதனை பிரதமர் தட்டிக்கேட்கவில்லை. தமிழக பல்கலைக்கழகங்களில் கூட துணைவேந்தரை நாம் நியமிக்க முடியவில்லை. தமிழகத்தின் உரிமையை தட்டிபறிக்கிறார்கள். இதே போல் திமுக இந்துக்களுக்கு ஏதோ விரோதமான கட்சி என்பது போல் சித்தரிக்கிறார்கள். திமுகவினரை போல் கடவுள் பக்தி உள்ளவர்கள் யாருமில்லை. முருகருக்கு திருப்பரங்குன்றத்தில் மாநாடு நடத்தி முடித்துள்ளது திமுக தான். திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் தமிழகம் முழுவதும் கோவில்களில் குடமுழுக்கு செய்துள்ளது. இதே போல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும், பெண்கள், மாணவ மாணவியர்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் என்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவிற்கு பின் மு.க.ஸ்டாலினை தான் பெண்கள் நம்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!