Friday, March 14, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்மாணவியர் மீதான போச்சம்பள்ளி சம்பவம் ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கே தலைகுனிவு

மாணவியர் மீதான போச்சம்பள்ளி சம்பவம் ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கே தலைகுனிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவி ஒருவர் அப்பள்ளியின் 3 ஆசிரியர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டுமின்றி, மனித சமுதாயத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மீது இது போன்ற புகார்கள் தொடர்வது வேதனைக்குரியது.

ஆசிரியர் பணி என்பது அறப்பணி, மாதா, பிதா, குரு தெய்வம், எதிர்கால சிற்பிகள் ஆசிரியர்கள், வாழ்க்கையின் ஒளிவிளக்கு ஆசிரியர்களே என பல்வேறு அடைமொழிகளால், தெய்வங்களுக்கு இணையாகவும், பெற்றெடுத்தவர்களுக்கு இணையாகவும் வணங்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் என அவர்களை போற்றி வருகிறது நமது சமுதாயம். இவர்கள் தான் சமுதாய சிற்பிகள், நல்ல சமுதாயத்தை கட்டமைப்பதும் இவர்கள் தான் என்பது நமது நம்பிக்கை. ஆனால் இதனையெல்லாம் உடைத்து தகர்த்து எறியும் வகையில், ஆசிரியர் கூட்டத்தில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகளின் பாலியல் செயல் ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்துக்கு அவப்பெயரையும், தலை குனிவையும் ஏற்படுத்திவருகிறது. ஏற்கனவே அதே மாவட்டத்தில் என்சிசி முகாமில் மாணவியர்களுக்கு நடந்த கொடுமை குறித்த அதிர்ச்சி ஒய்வதற்குள் மீண்டும் அதே பகுதியில் 13 வயது குழந்தையின் மீதான பாலியல் வன்கொடுமை புகார் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அதுவும் பாலியல் புகாரில் தொடர்புடைய ஆசிரியர் மூவரில் ஒரு ஆசிரியருக்கு வயது 57, மற்றொருவருக்கு வயது 48 என்பதை பார்க்கும் போது, இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய இவர்களது செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. தனது மகளாக பார்க்க வேண்டிய ஒரு குழந்தையை தங்களது இச்சைக்கு தீனியாக நினைத்த ஆசிரியர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்து பின்னரும், தொடர்ந்து இது போன்ற சம்பவங்களால் ஆங்காங்கே வெளிச்சத்துக்கு வந்து பலர் தண்டனைக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை அறிந்தும் இது போன்ற செயலலில் துணிந்து ஈடுபட்ட ஆசிரியர்களை என்னவென்று சொல்வது. இதன் பின் விளைவுகள் குறித்த அச்ச உணர்வு, ஒழுக்க உணர்வு, அற உணர்வு, அறிவு உள்ளவர்கள் செய்யும் செயலா இது. ஆசிரியர்களாக உள்ள இவர்களுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லேயே என்பதை காட்டுகிறது. இத்தனை காலம் எப்படி இவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்கு முன்னர் ஆசிரியர்கள் என்பவர்கள் சமுதாயத்தில் பெரிதும் மதிக்கப்பட்டனர். காரணம் அறிவு, ஒழுக்கம், நேர்மை, நற்சிந்தனை, சமுதாயப்பற்று என அனைத்தும் ஒருங்கே பெற்றவர்கள் அப்போது ஆசிரியர்களாக இருந்தனர். ஆனால் தற்போது உள்ள ஆசிரியர்கள் பலருக்கு இதில் எதுவுமே பொருந்ததாது என்பது சமீபத்தில் நடந்து வரும் பிரச்சனைகள் உணர்த்துவதாக உள்ளது. இதனால் தான் திறம்பட கண்ணியத்துடன் பணியாற்றும் நல்ல ஆசிரியர்களுக்கும் மதிப்பில்லா நிலை உருவாகிவருகிறது.

மதிப்பு இழப்பு:

தற்போது மாணவர்கள் ஆசிரியர்களை நேரடியாக திட்டுவதும், ஏன் தாக்குவதும் கூட நடந்து வருகிறது. மாணவர்கள் பலரும் ஆசிரியர்களுக்கு மதிப்பளிப்பதில்லை. அவர்களை ஏதோ கேவலமாக பார்ப்பவர்களாக தான் மாணவர்கள் செயல் உள்ளது. ஆனால் பர்கூர், போச்சம்பள்ளி சம்பவங்களை பார்க்கும் போது ஆசிரியர்களின் இது போன்ற செயல்கள் தான் ஆசிரியர் சமுதாயத்திற்கே மதிப்பிழப்பிற்கு காரணமாக இருக்கும் என தோன்றுகிறது. மேலும் தற்போதைய டிஜிட்டல் தலைமுறை மாணவர்களுக்கு கேள்வி அறிவு அபரிதமாக இருந்து வரும் நிலையில், போதிக்கும் அறிவும், ஆற்றலும் தற்போது உள்ள பல ஆசிரியர்களுக்கு குறைவாகவே இருப்பது தெரிகிறது. கிட்டத்தட்ட லட்சத்துக்கு மேல் சம்பளம் பெரும் ஆசிரியர்கள் அதற்காக தான் பணியாற்றுகிறார்களே தவிர அவர்களுக்கு சமுதாய அக்கரை, சமூகப்பற்று ஏதும் இருப்பது போல் தோன்றவில்லை. தற்போது மாணவர்கள் மத்தியிலும், சமுதாயத்திலும் ஆசிரியர்கள் மீதான மதிப்பு, மரியாதை இழந்து வருவதற்கு காரணம் இது போன்ற சிலரின் மிருகத்தனமான அருவருக்கத்தக்க செயல்பாடுகள் தான்.

ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம்

தற்போது கல்வித்துறையில் மாணவர்களை நல்வழிப்படுத்திட நீதிபோதனை வகுப்புகள் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என பலரும் சொல்லும் வேளையில், இந்த நீதிபோதனைகள், ஒழுக்கம் குறித்து முதலில் கற்பிக்க வேண்டியது மாணவர்களுக்கு அல்ல ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கு தான் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தான் முதலில் நீதி போதனைகளும், அறம் குறித்தும், ஒழுக்கம் குறித்தும் போதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்வு முறையிலும் மதிப்பெண்ணை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், அவர்களது நிர்வாகக்திறன், சமுதாயப் பற்று, ஒழுக்க மனநிலை போன்றவற்றையும் கருத்தில் கொண்டு தேர்வு இருக்க வேண்டும். ஏனென்றால் பிற அரசு ஊழியர்கள் போல் இல்லை ஆசிரியர்கள். வருங்கால சமுதாயத்திற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியர் பயிற்சி, பிஎட்., எம்எட்., பிஎச்டி, படித்ததால் மட்டுமே தகுதி வந்துவிட்டது என கருதக்கூடாது. அறம், ஒழுக்கம், சமுதாய அக்கரையும் இருப்பவர்கள் தான் ஆசிரியர்களாக தகுதி பெற்றவர்கள், ஆனால் இன்று பெரும்பாலும் சமுதாய அக்கரை இன்றி நமக்கு ஏன் வம்பு., நேரத்தை கடத்திவிட்டு, சம்பளத்தை பெற்றால் சரி என்ற மனநிலையில் தான் ஆசிரியர்கள் உள்ளனர். இந்த நிலையில் மாற்றம் வேண்டும். இதற்கு அரசின் கல்வித்துறை மீதான நடைமுறையிலும், ஆசிரியர் தேர்வு முறையிலும் மாறுதல் கொண்டுவர வேண்டும். தேர்வு முறையில் மதிப்பெண் தகுதியுடன், ஒழுக்கம் குறித்த தகுதியும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு பள்ளியில் நடந்துள்ள சம்பவம் சமுதாய அவலம். இதில் அரசை மட்டும் குறை சொல்லமுடியாது. தற்போதைய
ஆட்சி காலத்தில் மட்டுமல்ல. கடந்த ஆட்சிகாலத்திலும் இது போன்ற புகார்கள் உள்ளன. இதனை நமது எதிர்கட்சிகள் அரசியலுக்காக எடுத்துக்கொண்டு ஆளும் அரசை மட்டும் குற்றம் சொல்வதை தவிர்த்துவிட்டு இது போன்ற நிலைக்கு என்ன மாற்றம் கொண்டு வந்தால் சீர்படுத்திட முடியும் என ஆக்கப்பூர்வமான யோசனைகளை முன்வைக்க வேண்டும். கல்வித்துறையிலும், ஆசிரியர்கள் தேர்வு முறையிலும் என்ன மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு என்ன மாதிரி ஒழுக்க பயிற்சி இருக்க வேண்டும் என சிந்தித்து ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும். ஆளும் அரசும், எதிர்கட்சிகளும், கல்வித்துறை உயர் அலுவலர்கள், வல்லுநர்கள் இணைந்து ஒரு மாற்றம் கொண்டு வர முற்பட்டால் தான் இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அப்போது தான் நல்ல ஆசிரியர் சமுதாயம் உருவாக்கிட முடியும். இது போன்ற சமுதாய சீர்கேடான பிரச்சனைகள் இல்லாத நிலை உருவாகும்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!