ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் பகுதியில் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை கல்லூரியை முடித்து விட்டு பேருந்தில் சிங்களாந்தபுரம் ஆலமரம் பஸ் நிறுத்தத்தில் சக மாணவி ஒருவருடன் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது காரில் வந்த சிலர் ஒரு மாணவியை மட்டும் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இது குறித்து உடன் வந்த சக மாணவி பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பேளுக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடம் வராததால் பெற்றோர் உறவினர்களுடன் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து ராசிபுரம் டிஎஸ்பி., எம்.விஜயகுமார் சம்பவ சென்று விசாரணை மேற்கொண்டார். காரில் கடத்திச் சென்றவர்கள் குறித்து உடடியாக விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்து பெற்றோரை சமாதானப் படுத்தினார். இதனையடுத்து போலீஸார் அப்பகுதியில் சிசிடிவி கேமரா போன்றவைவற்றை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.