ராசிபுரம் அருகேயுள்ள புதுசத்திரம் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் ஆகாஷ் பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கான தொடக்க விழா பாவை வித்யாஸ்ரம் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் முதல்வர் ரோஹித் சதீஸ் வரவேற்றார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (கல்வி-வணிகம்) தீரஜ் குமார் மிஸ்ரா கலந்து கொண்டார்.
தொடர்ந்து பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் பேசுகையில், பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் போட்டித் தேர்வு நிறுவனமான ஆகாஷ் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் நேரடியாக பள்ளிக் கல்வி படித்து கொண்டிருக்கும் பொழுதே பாவை மாணவர்களுக்கு கிடைக்கும் பிரத்யேக ஆகாஷ் நுழைவுத் தேர்வு பயிற்சி ஐஐடி, ஐஐஐடி, ஜேஇஇ, ஒலிம்பியாட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, நாட்டின் சிறந்த மருத்துவ கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பொறியியல் கல்வி படிப்பதற்கு இடம் கிடைக்க வழி வகை செய்கிறது. மேலும் நாட்டின் தலைசிறந்த அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகள், அரசு பல் மருத்துவ கல்லூரிகள், அரசு ஹோமியோபதி, சித்தா போன்ற ஆயுஷ் படிப்புகளுக்கான கல்லூரிகள் மற்றும் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் எளிதாக இடம் கிடைத்திடும் வாய்ப்புகள் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அமையும்.
மேலும் சர்வதேச தரம் வாய்ந்த முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் , ஆய்வகங்கள், மாணவ மாணவியர் விடுதிகள், உள் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம், ஆடிட்டோரியம் ஆகிய அனைத்து நவீன வசதிகளுடன் அமைந்துள்ள பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் நீட் தேர்வு போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது என்றார். ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (கல்வி-வணிகம்) தீரஜ் குமார் மிஸ்ரா, ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தின் தமிழ்நாடு அளவிலான தலைமை நிர்வாகி சிவபிரசாத், இயக்குநர் ராகவேந்திரா ஆகியோர் பேசினர். பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்துகொண்டனர். நிகழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (சேர்க்கை) வழக்கறிஞர் கே.செந்தில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இறுதியில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் முனைவர் சதீஸ் நன்றி கூறினார்.