நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை முதல் தேதி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்து முக்கிய வீதி வழியாக சுவாமி திருத்தேர் பவனி மற்றும் இளைஞர்கள் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனாக வீரக்குமாரர்கள் கத்திப்போடும் நிகழ்வு நடைபெறும்.
அதன்படி தைப்பொங்கல் ஒன்றாம் தேதி முன்னிட்டு முகூர்த்தக்கால் நடுதல், சக்தி அழைத்தல் , கங்கணம் கட்டுதல், தொடர்ந்து வீரக்குமாரர்கள் அழகு சேவையுடன் சக்தி அழைத்து முக்கிய வீதி வழியாக தங்கள் உடல்களில் கத்தி போட்டு இளைஞர்கள், சிறுவர்கள், பெரியோர்கள் என ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் வரிசையாக சாலையில் வாழைக்காயுடன் படுத்தபடி இருந்தனர். அந்த வாழைக்காயை அருள் வந்த வீரக்குமாரர்கள் நடனமாடி அவர்கள் உடல் மேல் இருந்த வாழைக்காயை வெட்டினர்.
பின்னர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.