கொங்கு நாட்டு வேளாளர் அறக்கட்டளை அரூர் முத்துக்கவுண்டர் நினைவு கூறும் வகையில் ஆயிரம் பிறை கண்ட பெரியோர்களிடத்தில் ஆசி பெறும் விழா, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, கல்வி ஊக்கப் பரிசு வழங்கும் விழா ஆகியன ராசிபுரத்தில் நடைபெற்றது.
விழாவில் கொங்கு நாட்டு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த 67 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டது. விழாவுக்கு கொங்கு நல அறக்கட்டளை தலைவர் கே. செல்வக்குமார் தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலர் ஆர். தங்கவேலு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான கே.ஆர். என். ராஜேஷ்குமார் பங்கேற்று கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் விழா நடத்த வேண்டியதன் நோக்கம் பற்றியும் எடுத்துக்கூறி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிப் பேசினார். அவரைத் தொடர்ந்து அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் முத்து ராமசாமி தனது சிறப்புரையில் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். ராசி சீட்ஸ் மு.இராமசாமி சமுதாயம் எப்படி முன்னேற வேண்டும் அதற்கு கல்வி எப்படி உறுதுணையாக இருக்கும் என்பது பற்றியும் பேசினார். பின்னர் பேராசிரியர் கிருஷ்ணன் தனது ஊக்க உரையில் எப்படி பயிலலாம் என்ன படிப்புகள் தனி மனித முன்னேற்றத்தை உயர்த்து என்பது பற்றியும் பேசினார். தொடர்ந்து கொங்கு பாலிடெக்னிக் சேர்மன் பி.ராமலிங்கம், பிஎஸ்ஜி சீனிவாசன், பாரதியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ். இளையப்பன், முன்னாள் எம்எல்ஏ கே.பி. ராமசாமி மற்றும் குலக்கோயில் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரியில் பயிலும் 67 ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகையும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 124 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது பொருளாளர் ஆர். கனகராஜன் நன்றியுரை நிகழ்த்தினார். முன்னதாக 1000 பிறை கண்ட பெரியோர்களிடம் ஆசி பெரும் நிகழ்ச்சி் நடைபெற்றது.