Monday, January 13, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்குறைபாடுள்ள காரை மாற்றி புதிய கார் வழங்கவும் ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் கார்...

குறைபாடுள்ள காரை மாற்றி புதிய கார் வழங்கவும் ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் கார் உற்பத்தியாளருக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

உற்பத்தி குறைபாடுடன் விற்பனை செய்யப்பட்ட காரை மாற்றி புதிய காரை வழங்கவும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கவும் கார் உற்பத்தி நிறுவனத்திற்குநாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தொட்டியபட்டியில் வசித்து வருபவர் கோவிந்தன் மகன் ஏஜி சரவணகுமார் (43). இவர் கடந்த 2020 அக்டோபர் மாத இறுதியில் ரூ 20,03,841/- செலுத்தி நாமக்கல்லில் உள்ள கார் டீலரிடம் (தி ட்ரூ சாய் ஒர்க்ஸ்) புதிய டாடா நெக்ஸான் கார் ஒன்றை வாங்கியுள்ளார். காரை வாங்கிய 26 நாட்களில் காரின் வெளிப்புறத்தில் பல இடங்களில் பெயிண்டிங் குறைபாடு தோன்றியுள்ளது.
அதிர்ச்சி அடைந்த சரவணகுமார் கார் உற்பத்தி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். காரை விற்பனை செய்த டீலரின் நிறுவனத்தைச் சார்ந்த சேலத்தில் உள்ள சர்வீஸ் சென்டரில் காரை ஒப்படைத்து பழுது நீக்கம் செய்து கொள்ளுமாறு கார் கம்பெனி அவருக்கு பதில் அளித்துள்ளது. குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு அங்கு காரை ஒப்படைத்த ஒரு மாத காலத்திற்குப் பின்னரே கார் அவருக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் சில நாட்களில் காரின் வெளிப்புறத்தில் உள்ள பெயிண்டிங்கின் தோற்றம் மாறத் தொடங்கியுள்ளது. மீண்டும் காரை பழுது நீக்க சரவணகுமார் கொடுத்துள்ளார்.

குறைகளை முழுமையாக சரி செய்யாததால் அதிருப்தி அடைந்த சரவணகுமார் காரை எடுத்துக் கொள்ளாமல் புதிய கார் வேண்டும் என கார் உற்பத்தியாளருக்கு தெரிவித்துள்ளார். ஆனால், அவரது வேண்டுகோளை ஏற்க கார் உற்பத்தி நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் கார் உற்பத்தி நிறுவனத்தின் மீதும் கார் விற்பனையாளர் மற்றும் சர்வீஸ் நிறுவனத்தின் மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சரவணகுமார் கடந்த 2024 ஜூலை மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர் ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் இன்று (10-01-2025) தீர்ப்பு வழங்கினர். புதிய காரில் ஏற்பட்ட பெயிண்டிங் குறைபாடுகளை சரி செய்து விட்டதாக சர்வீஸ் சென்டர் ஒப்புக் கொள்வதன் மூலம் காரானது குறைபாடுகளுடன் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
காரின் இயந்திரத்தில் பழுது இருப்பதை மட்டுமே உற்பத்தி குறைபாடு என்று கூற இயலாது. காரை வழக்கு தாக்கல் செய்தவர் சர்வீஸ் சென்டரில் ஒப்படைக்கும் போது கொடுக்கப்பட்டுள்ள பழுது பார்ப்பு பட்டியலில் பத்துக்கு மேற்பட்ட குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ரூபாய் இருபது லட்சம் செலுத்தி காரை வாங்கியவர் குறைகளை சரி செய்து காரை இயக்க விரும்ப மாட்டார். அதனை அவர் விற்க நினைத்தாலும் பலமுறை பழுது பார்க்கும் மையத்துக்கு கார் சென்று வந்துள்ளதை இணையதளத்தின் மூலம் வாங்குபவர்கள் கவனிப்பார்கள். புதிய கார் என்பது மனிதர்களின் உணர்வுகளுடன் தொடர்பு கொண்டது.
புதிதாக வாங்கும் போதே பழுதுடன் கார் இருந்துள்ளதால் கார் உற்பத்தி நிறுவனமானது வழக்கு தாக்கல் செய்தவருக்கு எட்டு வார காலத்துக்குள் அதே வகை புதிய காரை வழங்க வேண்டும் அல்லது வழக்கு தாக்கல் செய்தவர் செலுத்திய பணத்தை பணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய காரை உற்பத்தியாளர் வழங்கும் வரை வழக்கு தாக்கல் செய்துள்ளவர் பயன்படுத்துவதற்காக பழுது பார்க்கும் மையத்தில் உள்ள வழக்கு தாக்கல் செய்தவரின் காரை நன்கு இயங்கும் நிலையில் அவருக்கு நான்கு வாரத்துக்குள் கார் சர்வீஸ் சென்டர் வழங்கவும் மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூபாய் மூன்று லட்சம் இழப்பீட்டை கார் உற்பத்தி நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!