தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்காமல் ஆளுநர் உள்நோக்கத்தோடு வேண்டுமென்று தாமதம் செய்து வருகிறார். துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் பல்கலைக்கழகங்களுடைய நிர்வாகம் சீரழிந்து வருகிறது. பல உயர் பொறுப்புகள் நிரப்பப்படாத காரணத்தினால் நிர்வாகம் ஸ்தம்பித்து இருக்கிறது. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த சூழலில் UGC விதிகளில் மாற்றம் செய்து ஆளுநர் தன் இஷ்டத்துக்கு துணைவேந்தர்களை நியமிக்கலாம் என்ற நிலை உருவாக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எக்காரணத்தைக் கொண்டும் இதை அனுமதிக்க முடியாது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாநில அரசுக்கு பங்கே இல்லை என்கிற விதத்தில் மாற்றங்கள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிற பல்கலைக்கழகங்களுடைய நிர்வாகத்தை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளக்கூடிய முயற்சியாக புரிகிறது. அந்தந்த பல்கலைக்கழகங்களை எப்படி நடத்துவது என்பது மாநில அரசுகளுடைய உரிமை. மாநில நிர்வாகத்தில் ஆளுநருடைய தலையீட்டை அதிகப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருப்பத்தை வரவேற்கின்றோம். இந்த விஷயத்தில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் ஒன்றிணைந்து UGC சட்ட விரோத மாற்றங்களை தடுக்க முன் வர வேண்டும்.